சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு பாரம்பரிய சந்தையில் பூண்டின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 500 ரூபாயை தாண்டி விற்பனை ஆவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் சேத்தியாத்தோப்பு பாரம்பரிய சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தை கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.
சந்தையின் சிறப்பு அம்சமே இங்கு விற்பனையாகும் பொருட்கள், காய்கறிகள் எப்போதும் விலை குறைவாகவும் தரமாகவும் கிடைக்கும் என்பதுதான். ஆனால் இப்படிப்பட்ட சந்தையிலேயே ஒரு கிலோ பூண்டின் விலை 450-லிருந்து 510 ரூபாய் வரை விற்பனையாகுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த பல மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு சராசரியாக 150, ரூபாயிலிருந்து 180 ரூபாய் என விற்பனையானது. தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள பூண்டு விலையால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்
சராசரி மக்களின் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் நிலையில், அன்றாட செலவினங்கள் கூட செய்ய முடியாமல் ஏழை எளிய மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அத்தியாவசிய பொருளான பூண்டின் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்