சங் பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
துக்ளக் பத்திரிக்கையின் 50 ஆவது ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் சேலத்தில் நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியை ஒட்டி நடந்த விழாவில் ராமர், சீதையின் உருவப் படங்கள் ஆடையில்லாமல் செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், அதனை துக்ளக் இதழ் துணிச்சலாக பிரசுரம் செய்ததாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து ரஜினி கூறியது பொய் என்றும் இது பெரியாரின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாகவும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சங் பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்,திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் அவர், ”சமூக நீதி கோணத்தில் பெரியாரை பார்த்தால் அவரது போராட்டங்களை ரஜினி புரிந்துக்கொள்ள முடியும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.