மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களில் 4 பேர் பார்க்கவே இல்லை என வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது. விசாரணையை தொடங்கியுள்ள ஆறுமுகச்சாமி, ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரிக்க 60க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவக்குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர் பாலாஜி உட்பட 5 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. எனவே, நேற்று அவர்கள் அனைவரும் நேற்று காலை விஷாரணை ஆணையத்தில் ஆஜரானர்கள். அப்போது, அவர்களிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், மருத்துவர் பாலாஜி மட்டும் ஜெயலலிதாவை நான் அவ்வப்போது பார்த்தேன் எனவும், டிசம்பர் 2ம் தேதி வரை அவர் உயிரோடு இருந்தார் எனவும் வாக்குமூலம் அளித்தார். ஆனால், மற்ற 4 மருத்துவர்களும் தாங்கள் ஜெ.வை சந்திக்கவே இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வாக்குமூலத்தில் அவர்கள் கூறியதாவது:
அப்போலோ மருத்துவமனையில் எங்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. தினமும் அங்கு வந்து அமர்ந்திருப்போம். அவ்வப்போது வெளியிடப்படும் மருத்துவ செய்தி குறிப்பை ஒருவர் வாசித்துக் காட்டுவார். தினமும் அந்த அறையில் இருந்துவிட்டு மாலையில் வீடு திரும்பி விடுவோம். ஜெ.வை ஒரு நாள் கூட நாங்கள் பார்க்கவே இல்லை” என அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
அரசு மருத்துவர்களின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.