பல வெளிநாடுகளில் உள்ள பேருந்துகளில் கண்டக்டர்கள் இருப்பதில்லை. பேருந்துகளில் ஏறும் முன்போ அல்லது பேருந்தில் ஏறும்போது பயணிகள் டிஜிட்டல் டிக்கெட்டை எடுத்து கொள்வதுண்டு.
அந்த வகையில் தமிழகத்திலும் கண்டக்டர் இல்லாத பேருந்துகளை சோதனை வடிவில் இன்று முதல் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக கோவை – சேலம் இடையே இயக்கப்படும் இடைநில்லா பேருந்துகளை இயக்க தமிழக அரசின் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. கோவையில் இருந்து புறப்பட்டு சேலம் செல்லும் இந்த இடை நில்லா பேருந்துகளில் ஏறும் பயணிகளிடம் பேருந்து நிலைய வளாகத்திலேயே கண்டக்டர் ஒருவா் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துவிடுவார். பின்னர் பேருந்து கிளம்பும் முன் அவர் இறங்கிவிடுவார். இடை நில்லா பேருந்து என்பதால் இந்த பேருந்துகளுக்கு கண்டக்டர் தேவையில்லை
இந்த கண்டக்டர் இல்லா பேருந்துகள் முதலில் கோவை-சேலம் பகுதியில் சோதனை வடிவில் இயக்கவிருப்பதால் இதில் கிடைக்கும் வெற்றியை பொருத்து சென்னை உள்பட பல நகரங்களில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த போக்குவரத்து துறை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு போக்குவரத்து ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தாலும் பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தினால் கண்டக்டருக்கான செலவு குறையும் என்பதே தமிழக அரசின் கணக்காக உள்ளது.