தாய் மொழியான இந்தி தேர்விலேயே லட்சக்கணக்கில் தோல்வி அடையும் உத்தர பிரதேச மாநில மாணவர்கள் நீட் தேர்வில் எப்படி அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் இந்தியாவில் மொத்தம் 13,26,725 பேர் இந்த தேர்வை எழுதியுள்ளனர். அதில் மொத்தம் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்கு தகுதி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. அதேபோல், தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 சதவீதமாகும். நீட் தேர்வில் தமிழகம் 35வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது
உத்தர பிரதேச மாநிலத்தில் 128,329 பேர் இந்த தேர்வை எழுதினர். அதில், 78,778 பேர், அதாவது 60 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் பீகார் மாநிலத்தில் 63,003 பேர் தேர்வு எழுதி 60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதாவது 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் 80 அல்லது 90 சதவீதத்திற்கும் அதிகமாக வெற்றி பெறும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் வெறும் 40 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்தல் முடிவு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகமே சந்தி சிரிக்கும் அளவுக்கு காப்பி அடித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 30 சதவீதம் மட்டுமே தேர்ச்சியான பிகாரில் எப்படி 60 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வில் 11 லட்சம் பேர் மாணவர்கள் தாய் மொழியான இந்தி பாடத்திலேயே தோல்வி அடையும் போது, நீட் தேர்வில் எப்படி அங்கு 60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பில் 490 மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் 1125 மதிப்பெண்கள் பெற்ற விழுப்புரத்தை சேர்ந்த ஏழை மாணவி பிரதீபா நீட் தேர்வில் 39 மதிப்பெண்கள் எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். எனவே, இதை ஒப்பிட்டு மத்திய அரசு நீட்தேர்வை கொண்டு வந்து தமிழக மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை பாழ்படுத்துகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.