திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன், சசிகலாவின் சகோதரர் திவாகரன் தொலைப்பேசியில் உரையாடியதாக வெளிவந்துள்ள செய்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து ஓரணியாகி விட்டது. தற்போது இரு அணிகளும் இணைந்து சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவிலிருந்தே வெளியேற்ற முயற்சிகள் எடுத்து வருகிறது. நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் கூட இந்த விவகாரமே பிரதானமாக இருந்தது.
இது தினகரன் மற்றும் சசிகலா தரப்பிற்கு கடும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, முதல்வர் பதவியிலிருந்து பழனிச்சாமியை தூக்கி எறியும் வேலையில் திவாகரன், தினகரன் தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சென்றிருந்தார். அவருடன் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி ராஜா உடன் இருந்தார். கட்சி என்பதை தாண்டி தன்னுடைய சமூகத்தினர் என்ற முறையில், திவாகரனுடன் நட்பு பாராட்டி வருபவர் ராஜா.
எனவே, ராஜா மூலம் தொலைப்பேசியில் ஸ்டாலினுடன் திவாகரன் பேசியதாக ஒரு செய்தி பரவி வருகிறது. எடப்பாடி தரப்பிற்கு எதிராக எடுக்கும் முயற்சிகளுக்கு திமுக ஒத்துழைக்க வேண்டும் என திவாகரன் கோரிக்கை வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த விவகாரம் முதல்வர் காதுக்கும் எட்ட, இதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உளவுத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிகிறது.
தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை உல்லாச விடுதியில் வைத்த தினகரன் தரப்பு, ஆட்சி கலைப்பு பற்றி திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அதை ஏற்க மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ஆயுதத்தை தினகரன் மற்றும் திவாகரன் தரப்பு தற்போது எடுத்து காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது. அதற்கு திமுக ஒத்துழைத்து ஆதரவு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.