ஜனவரி மாதத்துக்குள் வெங்காயத்தின் விலையேற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.
வெங்காய விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. பெரிய வெங்காயம் 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போல் மதுரை மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 130 ரூபாய்க்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வெங்காயம் விலையேற்றம் குறித்து பேசினார், இந்தியா முழுவதும் அதிகமாக மழை பொழிந்ததால் வெங்காய உற்பத்தி குறைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகள், அமுதம் பல்பொருள் அங்காடி ஆகியவற்றின் மூலம் ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் நிலவும் வெங்காய தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், மத்திய தொகுப்பிலிருந்து இன்னும் இரண்டு நாட்களில் 500 மெட்ரிக் டன் வெங்காயம் பெறப்பட உள்ளது. ஜனவரி மாதத்துக்குள் வெங்காயத்தின் விலையேற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என உறுதியளித்துள்ளார்.