2017ம் ஆண்டு போரட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு நிகழ்வுகளை தமிழகம் சந்தித்தது. அவற்றில் சில முக்கிய நிகழ்வுகளை இங்கே பார்ப்போம்.
ஜல்லிக்கட்டு போராட்டம்:
.
கடந்த 2016ம் வருடம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என பீட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியது. ஆனால், 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்க வேண்டும் என சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் கூட்டம் போராட்டத்தை முன்னெடுத்தது. நாட்கள் செல்ல செல்ல அப்போராட்டம் தமிழகம் முழுவது பரவியது. குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இளம்பெண்கள் கூட இரவு நேரங்களில் கடற்கரையிலேயே தூங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.
இப்போராட்டத்தை ஒடுக்க முடியாமல் தமிழக அரசும், காவல் துறையும் கையை பிசைந்து கொண்டு நின்றது. வேறு வழியில்லாமல், அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டத்தை சட்டசபையில் இயற்றி, மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கினார். ஆனால், அந்த சட்டத்தை நிரந்தரமாக்க கூறி மாணவர்கள் சென்னை மெரினாவில் போராட்டத்தை தொடர்ந்தனர். எனவே, களத்தில் இறங்கிய போலீசார் குண்டு கட்டாக அவர்களை வெளியேற்றினர். அப்போது, கடற்கரை பகுதியில் கலவரம் ஏற்பட்டு களோபரம் ஆனது. 2 நாட்களுக்கு பின்னே இயல்பு நிலை ஏற்பட்டது.