ஆஞ்சநேயர் பிறந்தநாள் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர்.
"ராமா" என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரத புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும் மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம்.
அனுமன் ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், துன்பம் விலகும், குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சார்த்தி, ஆராதிக்க வேண்டும்.
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். விரதமிருக்கும் நாட்களில் மிகச் சுத்தமாக இருக்க வேண்டும். அனுமனை முழுமையாகத் தியானித்து ஒருவேளை உணவு மட்டும் உண்டால், உன்னத பலன் கிடைக்கும்.
அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவத்து வழிபட்டால் தடைகள் அகலும். வெற்றிலை மாலையை அணிவிப்பவர்கள் தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப, தாராபலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை அடையலாம். அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம் போன்றவை அனுமனுக்குரிய நைவேத்தியங்களாக அமைகின்றன.