‘சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்று மாற்றம் பெற்றுவிட்டது. அதன் உண்மையான விளக்கம் சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும்.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர். விரதங்கள் மூன்று வகைப்படும். ஒன்று வார விரதம், மற்றொன்று திதி விரதம், மூன்றாவது நட்சத்திர விரதமாகும்.
வார விரதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும். நட்சத்திர விரதமிருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும். திதி விரதமிருந்தால் விதி மாறும். எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட ‘விதி’ மாற வேண்டுமானால், திதி பார்த்து விரதமிருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டியன்று விரதமிருந்து ஆலயங்களுக்குச் சென்று, முருகப்பெருமானை வழிபட்டு வருபவர்களும் உண்டு. அதைப்போல ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று கந்தனை வழிபட்டால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள், சஷ்டியன்று மட்டும் முழுமையாக விரதம் இருப்பது நல்லது.