முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.
அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமர முடிந்தவர்கள் அப்படி அமரலாம். முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.
மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.
இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள். மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். வெளியே விடுங்கள்.
உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற விஷயங்களுக்குச் செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள். எண்ணிக்கையைத் தொடருங்கள்.
உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து, நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.