முருகன் அவதாரமே சூரனை சம்ஹாரம் செய்வதற்காகத்தான் என்பதை உணர்த்துகிறது புராணம். சூரபத்மனின் கொடுமையை தாங்காமல், தேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள் நிலையைச் சொல்லி வருந்தினர்.
சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும். அதனால் அவரிடம் முறையிட்டால் விடுதலை கிடைக்கும் என்றார் பிரம்மா. தேவர்களும், கயிலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். அவருக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புரு ஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு. அவற்றில் இருந்து. ஆறு நெருப்புப் பொறிகளை உண்டாக்கினார்.
அவை சரவணப்பொய்கையில் விழுந்து, குழந்தைகளாக மாறின. கார்த்திகை பெண்கள் வளர்க்க அவற்றை அன்னை பார்வதி ஒன்று சேர்த்த போது, கந்தன் ஆனார். அழகான அவர் முருகன் ஆனார். திருச்செந்தூரில் சூரபத்மனை போரிட்டு வென்று தேவர்களை காத்தார். ஐப்பசி மாதம் சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததாக ஐதீகம். அதனால், கந்த சஷ்டியன்று முருகன் கோவில்கள் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
முருகப்பெருமானுக்கு அன்னை பார்வதி தன் சக்தி மிகுந்த வேலை கொடுக்க, சூரபத்மனுக்கு எதிரான போருக்கு புறப்பட்டார். திருச்செந்தூரில் தன் படை பாசறையை அமைத்தார்.
பார்வதி தேவியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவசக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான வீரபாகுதேவர், வீரகேசரி, வீர மகேந்திரர், வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீராக்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகனின் படைத் தளபதிகளாக விளங்கினர்.
சூரபதுமனையும் அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் அழித்து தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலைநாட்ட புறப்படுவாயாக என்று கந்தனுக்கு, சிவபெருமான் அன்பு கட்டளையிட்டார்.