பொதுவாக நமது இந்துமத கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்களிலும் முன்னிலை வகிக்கும் இன்றியமையாத ஒரு மங்கள பொருட்கள்தான் வெற்றிலை, பாக்கு ஆகும். வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் உறைந்துள்ளன.
வெற்றிலையின் நுனியில் மூதேவியும், வெற்றிலையின் காம்பில் மகாலட்சுமியும், வெற்றிலையின் நரம்பில் பிரம்மாவும், வெற்றிலையின் முன் பகுதியில் சிவனும், வெற்றிலையின் பின் பகுதியில் சக்தியும் என ஐம்பெரும் தெய்வங்கள் உறைந்துள்ளனர். எனவே வெற்றிலை போடும்போது நுனியையும், காம்பையும், நரம்பையும் நீக்கி விட்டு சுண்ணாம்பு தடவி போடுதல் நன்று.
வெற்றிலைக்கு முன்னம் பெறும் பாக்கை வாயிலிட்டால்
குற்றமுறும் உறவோர் கூட்டம்போம்-வெற்றிலையை
முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம் மார்பின்
மன்னிட்டு வாழும் பூ மாது..
வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது. இது குற்றமாகும். பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும். மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதிகள் கூறுகிறது. அதனால் முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மெல்ல மகா விஷ்ணுவின் இடது மார்பில் வாழும் பூமகள் மகாலட்சுமியின் அருள் கிட்டும்.