மனிதனின் மனம் கடுகுப்பொட்டலம் போன்றது. அந்தப் பொட்டலம் கிழிந்து கடுகு நாலாபுறங்களிலும் ஓடிவிட்டால் அதை ஒன்றுசேர்ப்பது சிரமம். அதுபோல, மனம் உலக விஷயங்களில் சிதறத் தொடங்கினால் அதைக் குவித்து ஒருமுகப்படுத்துவது சுலபமானதல்ல.
* சூரிய உதயத்திற்கு முன்னரே பணிகளைத் தொடங்கினால், அன்றைய பணிகள் யாவும் நன்றாக நடைபெறும். அதுபோல, சிறுவயதிலேயே ஆன்மிக விஷயங்களைத் தெரிந்து கொண்டால் அது முதுமை வரை துணைநிற்கும்.
* கடவுளைத் தேடுபவன் கடவுளை அடைகிறான். செல்வத்தையும், செல்வந்தர்களையும் நாடுபவன் அவற்றையே அடைகிறான். வாழ்வில் எதை விரும்பி நாடுகிறார்களோ அதையே அடைவார்கள்.
* ஒளியை உணர்பவன் இருளையும் உணர்கிறான். பாவத்தைப் பற்றித் தெரிந்தவனுக்குப் புண்ணியமும் இன்னதென்று தெரிந்திருக்கும். குணத்தைப் பற்றி அறிந்தவன், குற்றத்தைப் பற்றியும் அறிந்திருப்பான்.
* பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் கனத்தினால் தாழ்ந்து வளையும். அதுபோல நீங்கள் பெருமை மிக்கவராக வாழவேண்டுமானால் அடக்கமும் பொறுமையும் தேவை.