தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகிறது. சிவசக்தி ஜக்கியம் இந்த நாளிலேயே நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகிறது.
இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகிறது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள். அந்த அவனாகிய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந்தமையாலேயே உலக இயக்கம், இயற்கையின் அதாவது பஞ்சபூதங்கள் வழியாக நிகழ்கின்றது என்பதை நினைவில் கொள்ள வழிவகுக்கும் நாள் இந்நாள்.
சிவனுக்குரிய சிறப்பு மிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத்தைப் பூச நன்னாளானது, முருகப் பெருமானுக்குரிய விசேஷ நாளாகவும் விளங்குகிறது. முருகப் பெருமான் அன்னையிடம் வேல் வாங்கிய திருநாளும் இதுவாக அமைகிறது.
வள்ளல் பெருமான் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார். காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும். தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள். மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பதாகும்.
அகரம் +உகரம் + மகரம் = ஓம். தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் இதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும். அப்போது ஞானசபையில் இருந்து அக்னியான ஜோதி கான்பிக்கப்படும். அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி. சந்திரன் என்பது மன அறிவு. சூரியன் என்பது ஜீவ அறிவு. அக்னி என்பது ஆன்மா அறிவு.
சந்திரன் சூரியனில் அடங்கி, சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தைபூசம். மனம் ஜீவனில் அடங்கி, ஜீவன் ஆன்மாவில் அடங்கி, ஆன்மா சிவத்துடன் கலந்து விடும் என்பதை காட்டவே தைபூசம் நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.