சோட்டாணிக்கரை பகவதி கோவில் கேரளத்தில் மிகவும் பெயர் பெற்ற இந்து மதத்தினர் போற்றும் அன்னை இறைவியான பகவதி கோவில் ஆகும். பிரபலமான சோட்டாணிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளில் மூன்று வெவ்வேறு வடிவங்களில் தெய்வமாக கருதி வழிப்படப்படுகிறார்.
காலையில் வெள்ளை புடவை அணிவித்து சரஸ்வதியாகவும், மாலை சிவப்பு புடவை அணிவித்து லட்சுமியாகவும், இரவு நீலப்புடவை அணிவித்து துர்க்கையாகவும் பகவதி அம்மன் வழிபடப்படுகிறார்.
பொதுவாக தெய்வங்கள் அனைத்தும் இடது கையை பாதத்தில் காட்டி, வலது கையில் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பகவதி அம்மன், எல்லாவித பாவத்திலிருந்து காப்பவள் என்பதால் வலது கையை பாதத்தில் காட்டி இடது கையில் அருள்பாலிப்பது சிறப்பு.
மூகாம்பிகை கோவில் நடை திறக்கும் முன்னரே, பகவதி அம்மன் கோவிலின் நடை திறக்கப்பட்டுவிடும். முதலில் பகவதி அம்மன் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அம்மன், பின்னர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதாக ஐதீகம்.
திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, நல்ல கணவர் கிடைக்க, குழந்தை வரம் கிடைக்க பகவதி அம்மனை தேடி பல பக்தர்கள் குறிப்பாக பெண்கள் அதிகம் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.
பகவதி அம்மனின் வலது புறம் உள்ள மகாவிஷ்ணுவை, “அம்மே நாராயணா.. தேவி நாராயணா.. லக்ஷ்மி நாராயாணா. பத்ரி நாராயணா.” என அழைத்து வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பாகும்.
காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் காலை 3:30 மணி முதல் 12:00 மணி வரை திறந்திருக்கும்.