இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 287 ரன்களை ஆஸி இலக்காக நிர்னயித்தது. 287 ரன்களை பெர்த் ஆடுகளத்தில் துரத்துவது எளிதில்லை என்றாலும் இந்தியா கூடுமானவரை போராடும் என எதிர்பார்க்கப்பட்டது. அத்தனைக்கும் மேல நம்மிடம் சேஸிங் கிங் கோஹ்லி இருக்கிறாரே என்று ஆவலாக காத்திருந்தனர் ரசிகர்கள்.
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் முதல் ஓவரிலேயே க்ளீண் போல்டாகி வெளியேறினார். நடந்த 2 டெஸ்ட் மேட்ச்களிலும் ராகுல் உருப்படியான ஒரு இன்னிங்ஸைக் கூட இன்னும் விளையாடவில்லை. அடுத்தப் போட்டியில் அவர் கண்டிப்பாக கழட்டிவிடப்பட வேண்டும் என ரசிகர்கள் இப்போதே நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அதையடுத்து களமிறங்கிய இந்தியாவின் நங்கூரம் புஜாரா இம்முறை வெகு சீக்கிரமே அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். 4 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஹேசில்வுட் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த கோஹ்லியுடன் கைகோர்த்தார் முரளி விஜய். பொறுமையாக விளையாடிய இருவரும் சிறிது நேரம் தாக்குப் பிடித்தனர். 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோஹ்லி லியன் பந்தில் ஸ்லிப்பில் நின்ற கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அந்தக் கனமே இந்திய ரசிகர்களின் வெற்றிக் கனவு சுக்கு நூறானாது. அதையடுத்து சிறிது நேரத்தில் விஜய்யும் நடையைக் கட்டினார்.
தற்போது ரஹானேவும் ஹனுமா விஹாரியும் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். தற்போது வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்துள்ளது. ரஹானே 17 ரன்களோடும் விஹாரி 12 ரன்களோடும் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒரு அற்புதம் நடந்தால் ஒழிய இந்திய இந்த போட்டியை வெல்வது எட்டாகனிதான்.