Publish Date: Tue, 19 Feb 2019 (16:00 IST)
Updated Date: Tue, 19 Feb 2019 (16:02 IST)
ஐபிஎல் 2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருப்பதால் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில் பாதுகாப்புப் பிரச்சனைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் ஐபிஎல் தென் ஆப்பிரிக்கா அல்லது துபாயில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இதுபோல 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகள் பாராளுமன்றத் தேர்தலின் போது வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது.
ஆனால் தேதி மற்றும் போட்டி அட்டவணைக் குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது. அதனையடுத்து இப்போது முதல் இரண்டு வாரங்களுக்கான ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நடக்க இருக்கிறது.
போட்டிக் குறித்த முழு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதை அடுத்து இப்போது சென்னையில் முதல் போட்டி நடக்க இருக்கிறது. கடந்த ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சனையால் சென்னையில் இரண்டு போட்டிகள் மட்டுமே நடைபெற்றதை அடுத்து இந்தாண்டு சென்னையில் முதல் போட்டித் தொடங்குவதால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.