டெல்லி வேட்பாளரை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்கள் லக்ஷ்மண் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் கம்பீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக வில் இணைந்த கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஆம் ஆத்மி ஆதிஷி களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆதிஷியைக் கேவலமாக விமர்சித்து அந்தத் தொகுதியில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுவதாகவும் அதனை கம்பீர் வெளியிடுவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை தேசியளவில் மிகவும் பரபரப்பாகியுள்ளது . ஆதிஷியின் குற்றச்சாட்டை அடுத்து ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் கம்பீருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளைக் கம்பீர் மறுத்துள்ளார். மேலும் இது குறித்து ‘நான்தான் இந்த செயலில் ஈடுபட்டேன் என்பதை நிரூபித்தால், போட்டியிலிருந்து விலகுகிறேன். அப்படி நிரூபிக்காவிட்டால் நீங்கள் இருவரும் அரசியலிலிருது விலகி விடுகிறீர்களா ?’ என சவால் விட்டுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களான லக்ஷ்மண் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் கம்பீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். லக்ஷ்மண் ‘ எனக்கு 20 ஆண்டுகளாகத் தெரியும். கம்பீர் நேர்மையானவர். பெண்கள் மீது மதிப்புக்கொண்டவர் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்’ எனவும் ஹர்பஜன் சிங் ‘ கம்பீர் தேர்தலில் வெற்றி பெறுவாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் அவர் எல்லாவற்றுக்கும் மேலானவர். அவர் இதுவரை எந்தப் பெண்ணை பற்றியும் மோசமாக பேசியதில்லை’ என்று கூறினார்.