கிரிக்கெட் உலகில் இன்றைய நிலவரப்படி நம்பர் 1 கிரிக்கெட் வீரராக திகழ்ந்துவரும் விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்வின் ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.
விராட் கோஹ்லி தான் இறங்கும் ஒவ்வொருப் போட்டியிலும் தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னிலும் ஏதேனும் ஒரு சாதனையை முறியடித்து வெற்றி நடைப் போட்டு வருகிறார். சந்தேகமே இல்லாமல் நிகழ்காலக் கிரிக்கெட் வீரர்ர்களில் தலைசிறந்த வீரர் அவர்தான்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிபெற்று, அங்கிருந்தே நியுசிலாந்து சென்றுள்ளது. நேற்று நியுசிலாந்தில் இருந்து தனது விராட் கோஹ்லி அப்ளிகேஷன் மூலம் ரசிகர்களோடு பேசினார்.
அப்போது ’இன்னும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனுஷ்காவுக்கும் குடும்பத்துக்குமே அதிக முக்கியத்துவம் அளிப்பேன். அப்போதும் கிரிக்கெட் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும். ஆனால் எந்த காலத்திலுமே குடும்பமே முக்கியமானது. கிரிக்கெட்டை நேசிக்காவிட்டால் சரியாக விளையாட முடியாது என சொல்கிறார்கள், நான் அதை நம்பவில்லை. ஏனென்றால் என்ன நடந்தாலும் நீங்கள் வீட்டுக்குதான் வரவேண்டும். வாழ்க்கையை விட வேறு எதுவும் பெரிதில்லை.’ எனக் கூறினார்.
தற்போது 30 வயதாகும் விராட் கோஹ்லி இன்னும் 8 ஆண்டுகள் விளையாடினால் கிரிக்கெட் உலகின் முக்கியமான சாதனைகள் பலவற்றை முறியடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.