தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த பல கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு படமாகி ஹிட் அடித்துள்ளது. நடிகையர் திலகம் சாவித்ரி அம்மாவின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநாடி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்து தேசிய விருது வாங்கியது.
அதையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி உருவாகி வருகிறது. இப்படியான நேரத்தில் பிரபல பாடகி பி. சுசிலா ஏ. ஆர் ரஹ்மானிடம் தன்னுடைய பயோ பிக் படத்தை குறித்து உதவி கேட்டுள்ளார்.
அது பற்றி கூறிய இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், “தென்னிந்திய திரையுலகின் தலைசிறந்த பாடகியான பி.சுசீலாவிடம் பேசினேன். அவரிடம் எனது 99 சாங்க்ஸ் படத்தை ஓ.டி.டியில் பார்க்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர் படத்தை பார்த்து விட்டு என்னை அழைத்து படம் நன்றாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கை கதையையும் இதுபோலத்தான் படமாக்க வேண்டும். அதற்கு நீங்கள் உதவ முடியுமா? என்று கேட்டார்.
ஏழு தலைமுறையாக பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடிய பி.சுசீலா எனக்கு பிடித்த பாடகி. அவர் எனது படத்தை பாராட்டியது மகிழ்ச்சி” என்றார். பாடகி சுசிலாவின் வாழ்க்கை படமாக்கும் வேலை துவங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்திற்கு நிச்சயம் ஏஆர். ரஹ்மான் இசையமைப்பார் என கோலிவுட் எதிர்பார்க்கிறது.