சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாஸை பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
விஜய்- முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லூக் கடந்த 21 ஆம் தேதி விஜய் பிறந்தநாளைன்று வெளியிடப்பட்டது. அதில், விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பது போல் காட்சி அமைந்துள்ளது.
இந்த ஃபர்ஸ்ட் லூக் புகைப்படத்திற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், பொது சுகாதாரத்துறை சர்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை நீக்குமாறு இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஜய், படத்தின் தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பியது. இதையடுத்து, சன்பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கியது.
இதற்கிடையே, அடையார் புற்று நோய் மருத்துவ மையம் சர்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை விளம்பரப்படுத்தியதற்காக ரூ. 10 கோடி தங்களது புற்று நோய் மையத்திற்கு இழப்பீடாக வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்தது.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாஸை 2 வாரத்தில் இவ்வழக்கு குறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.