சென்னையில் பட்டாசுக் கடைகளுக்கு விதிகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகத் தொடரப்பட்ட வழக்கில் 24-ந்தேதிக்குள் பதிலளிக்கக் கூறி உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகை என்றாலே புதுத்துணியும் பட்டாசும்தான் அனைவருக்கும் நியாபகம் வரும். அதில் பட்டாசு என்பது எவ்வளவுதான் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் கொஞ்சம் அபாயகரமான பொருள்தான். ஆனாலும் தீபாவளியின் போது பட்டாசு விற்பனை படுஜோராக தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள தீவுத்திடலில் பட்டாசு விறபனைக் கடைகளை அமைத்துக்கொள்ள வியாபரிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான விதிமுறைகளை உயர்நீதி மன்றம் 2013 ஆம் ஆண்டு உருவாக்கி உத்தரவு பிறப்பித்தது.
இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இந்த பட்டாசுக் கடைகள் அமைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த எஸ். மணிக்குமார் மற்றும் சுப்ரம்ண்யம் பிரசாத் அடங்கிய அமர்வு வரும் 24 ந்தேதிக்குள் இதற்கான பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.