இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான 'மனுஷி' திரைப்படத்திலிருந்து குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மனுஷி'. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். ஆனால், இந்த திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பே தணிக்கை வாரியத்தால் சிக்கலை சந்தித்தது.
திரைப்படத்தில் 37 காட்சிகளும், வசனங்களும் ஆட்சேபனைக்குரியதாக இருப்பதாக கூறி, அவற்றை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தணிக்கை வாரியம் சுட்டிக்காட்டிய ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் நியாயமானதா என்பதை நேரடியாக ஆராய முடிவு செய்தார். இதற்காக, அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மனுஷி திரைப்படத்தை பார்த்தார்.
இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சில காட்சிகளை குறிப்பிட்டு, அவற்றை படத்திலிருந்து நீக்குமாறு படக்குழுவுக்கு உத்தரவிட்டார். நீக்கப்பட்ட காட்சிகளுடன் படத்தை மீண்டும் இரண்டு நாட்களுக்குள் தணிக்கை வாரியத்திற்கு அனுப்பி, இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.