காந்தாரா படம் பெற்ற பெருவெற்றிக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகம் காந்தாரா-1 உருவாகி ரிலீஸாகவுள்ளது. படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியிருந்தார். இதன் ஷூட்டிங் ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்த நிலையில் சமீபத்தில் நிறைவுற்றது. படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் இன்று ஐந்து மொழிகளில் இதன் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழில் சிவகார்த்திகேயன் டிரைலரை வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தில் காந்தாராவாக மறைந்த கதாநாயகனின் மகன் அப்பா ஏன் அப்படி மறைந்து போனார் எனக் கேட்க அதற்கு விடை கூறுவது போல பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதையாக விரிகிறது டிரைலர்.
மக்களுக்காகப் போராடும் தலைவனாக அரசனாக ரிஷப் ஷெட்டி மிரட்டுகிறார். முதல் பாகத்தை விட பிரம்மாண்டமான அழகிய காட்சிகளில் ஈர்க்கிறது டிரைலர். பழங்குடியின மக்களுக்கும் அரசர்களுக்கும் இடையிலான மோதலையே இரண்டாம் பாகமும் கையாள உள்ளதாக தெரிகிறது. மொத்தத்தில் படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டும் விதமாக இந்த டிரைலர் தொகுக்கப்பட்டுள்ளது.