சமீபத்தில் ரஹ்மான் ஆஸ்கர் விருதுகள் வென்று 10 ஆண்டுகள் முடிவுற்றதை அடுத்து மும்பையில் நடந்த ஒரு விழாவில் ரஹ்மான் தனது மகளோடுக் கலந்துகொண்டார்.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கி 10 ஆண்டுகள் நிறைவுற்றதை அடுத்து படக்குழுவினரால் ஒருப் பாராட்டு விழா மும்பையில் நடத்தப்பட்டது. அதில் ரஹ்மான், தனது மகள் கதிஜாவோடு கலந்துகொண்டார். அப்போது ரஹ்மானுக்கும் அவரது மகளுக்கும் இடையில் உணர்வுப் பூர்வமானக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வந்திருந்த கதிஜா உடல் முழுவதையும் மறைக்கும் நிகாஃப் அணிந்து வந்திருந்தார். இது முஸ்லீம் பெண்களால் அணியப்படும் ஒரு வகை ஆடை. இந்த ஆடை மிகவும் பிற்போக்குத் தனமானது என உலகம் முழுவதும் கூறப்பட்டு வருகிறது. அதனையடுத்து நிகாஃப் அணிந்துள்ள கதிஜாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் சர்சசைகளைக் கிளப்பியது. ரஹ்மான் மீது பிற்போக்குவாதி என்றக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதை வழக்கம் போல நெட்டிசன்களும் கேலி செய்ய ஆரம்பித்தனர்.
இதையடுத்து இந்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் விதமாக மற்றொருப் புகைப்படத்தை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அம்பானி வீட்டுக் கல்யாணத்தில் தனது மகள்கள் இருவர் மற்றும் மனைவி அம்பானியின் மனைவியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவரது இளையமகள் ரஹினாவும் மனைவி சாய்ராவும் புர்காவோ அல்லது நிகாஃபோ அணியாமல் சாதாரண உடைகளையே அணிந்துள்ளனர். ஆனால் மூத்தமகள் கதீஜா அதிலும் நிகாஃப்தான் அணிந்துள்ளார். அதன் கீழ் ரஹ்மான் #freedomtochoose என்ற ஹேஷ்டேக்கையும் பதிந்துள்ளார். இதன் மூலம் தன் மனைவி மற்றும் மகள்களின் உடை விஷயத்தில் தான் எந்த உரிமைமீறலையும் வெளிப்படுத்துவதில்லை என விளக்கமளித்துள்ளார்.