ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் கருப்பு படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தின் முதல் தனிப்பாடலான God mode பாடல் வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான காந்தாரா-1 படம் பெற்ற அளப்பரிய வெற்றியை அடுத்து கருப்பு படத்தில் க்ளைமேக்ஸ் காட்சி மாற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் க்ளைமேக்ஸ் காட்சிக்கு ஏற்றவாறு தற்போது மேலும் சிலக் காட்சிகளையும் மாற்றுகின்றனராம். இதற்காக சூர்யா மீண்டும் மூன்று நாட்கள் இந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்னும் கருப்பு படத்தின் ஓடிடி வியாபாரம் முடியாததால் அதன் ரிலீஸ் குறித்தக் குழப்பம் நிலவுகிறது. ஆனால் சூர்யா 46 படக்குழுவினர் திட்டமிட்டபடி சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அவர்களிடம் இருந்து கருப்பு படத்தின் தயாரிப்பாளரான எஸ் ஆர் பிரபுவுக்கு ஒரு செய்தி சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி அவர்கள் தங்கள் படத்தை மே மாதம் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் அதனால் அதற்கேற்றவாறு கருப்பு படத்தின் ரிலீஸை உறுதி செய்யகொள்ள கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.