தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் திருவாரூர் தொகுதி் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த தொகுதி ஆகும். எனவே இந்தத் தொகுதியில் வெல்வது என்பது திமுகவின் பிரஸ்டீஜ் சம்பந்தப்பட்டது. அதே நேரம் ஆளும் அதிமுகவுக்கு இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலும் பலத்தை நிரூபிக்கும் ஒரு களமாகும். ஏனெனில் ஒன்றிணைந்த அதிமுக தனது பலத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் திருவாரூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்கள் பரவின. இதுதொடர்பாக மதுரையில் அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது கமல் திருவாரூர் தொகுதியில் தான் போட்டியிடப் போவது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த இடைத்தேர்தல்களை பொதுமக்கள் ஆளும்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் தளமாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதைத்தான் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியும் செய்யப்போகிறது என்று கமல் தெரிவித்தார்.