மகாராஜா என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கடந்த ஆண்டு கொடுத்தார் விஜய் சேதுபதி. தேய்ந்துகொண்டே சென்ற அவரின் மார்க்கெட்டை அந்த படம் தூக்கி நிறுத்தியது. அதன் பிறகு அவரின் அடுத்த படமாக நேற்று ஏஸ் ரிலீஸானது.
இந்த படத்தில் விஜய் சேதுபதியோடு ருக்மிணி வசந்த், யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடிக்க, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்துள்ள ஏஸ் திரைப்படம் முதல் நாள் வசூலில் ஒரு பெரியத் தொகையை ஈட்டியிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அதுதான் நடக்கவில்லை. இந்த படத்துக்கு தொடக்கத்தில் இருந்தே பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதற்கேற்றார்போலதான் படத்துக்கான விளம்பரமும் இருந்தது. இந்நிலையில் முதல் நாளில் இந்த படம் தமிழக அளவில் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில்தான் வசூலித்துள்ளதாம்.
இந்நிலையில் படம் குறித்துப் பேசியுள்ள விஜய் சேதுபதி “ஏஸ் படம் ரிலீஸானதே பலருக்கும் தெரியவில்லை. அது எங்கள் தவறுதான். ஒரு இக்கட்டான சூழலால் படத்தை உடனடியாக ரிலீஸ் செய்யவேண்டிய சூழல் உருவானது. கமல் மற்றும் சிம்பு போன்ற பெரிய நடிகர்கள் உள்ள தக் லைஃப் படத்தை ப்ரமோட் செய்யவே 25 நாட்கள் தேவைப்படுகிறது. இருந்தாலும் ஏஸ் படத்துக்கு ரசிகர்கள் இடையே இருந்து நேர்மறையான விமர்சனம் வருவது மகிழ்ச்சியளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.