பிரபல சீன தொழிலதிபரான ஜாக்மா சில மாதங்கள் முன்னதாக மாயமான நிலையில் அவர் ஜப்பானில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக அளவில் பிரபலமாக உள்ள ஆன்லைன் ஷாப்பிங் தளமான அலிபாபா மற்றும் ஆண்ட் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருபவர் சீன தொழிலதிபரான ஜாக்மா. கடந்த 2020ம் ஆண்டில் சீனாவின் அரசு வங்கிகள் வட்டிக்கடை போல செயல்படுவதாக இவர் குற்றம் சாட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சீன அரசுக்கும், ஜாக்மாவுக்கு இடையே முரண்பாடுகள் எழுந்து வந்த நிலையில் சீன அரசு ஜாக்மாவின் ஆண்ட் மற்றும் அலிபாபா நிறுவனங்களின் ரூ.3.18 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்தது. அதை தொடர்ந்து ஜாக்மா மாயமானதால் மேலும் பரபரப்பு எழுந்தது.
ஜாக்மா வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் கூட பல்வேறு தகவல்கள் பரவின. ஆனால் தற்போது ஜாக்மா ஜப்பானில் அடைக்கலம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ஜப்பானில் தனது குடும்பத்தோடு அடைக்கலமடைந்த அவர் மேலும் பல நாடுகளுக்கு டூர் சென்றதாகவும் கூறப்படுகிறது.