அமெரிக்க அதிபர் வேட்பாளர்களில் ஒருவரான டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு அளிக்கப் போவதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதுகின்றனர் என்பதும், சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பில் இருவருக்கும் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசமே இருப்பதாக வெளியாகி உள்ளதால், இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் வெளிப்படையாக டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவு அளித்துள்ளார். மேலும், பல நேரங்களில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை எலான் மஸ்க் தொடங்கி வைத்தார். மேலும், இந்த கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்து இடுபவர்களில் தினமும் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
தேர்தல் வரை தினமும் ஒரு ட்ரம்ப் ஆதரவாளருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப் போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.