டைட்டானிக் கப்பலில் உடைந்த பாகங்களை காண்பதற்காக ஆழ்கடலுக்கு நீர்மூழ்கியில் சென்ற 5 பேர் கொண்ட குழு உயிரிழந்துவிட்டதாக வெளியாகியுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
110 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை ஆழ்கடலுக்குள் சென்று காண்பது பலருக்கு த்ரில்லிங்கான பயணமாக உள்ளது. இதற்காக சமீபத்தில் OceanGate என்ற நிறுவனத்தின் நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டனை சேர்ந்த பணக்காரர், பாகிஸ்தானை சேர்ந்த செல்வந்தர் மற்றும் அவரது மகன் என 4 பேர் மற்றும் ஒரு நீர்மூழ்கி இயக்குபவருடன் நீர்மூழ்கி ஆழ்கடலுக்குள் சென்றது.
அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக்கை காண சென்ற குழுவின் நீர்மூழ்கியுடனான தொடர்பு 2 மணி நேரங்களுக்கு பிறகு மாயமானது. மாயமான நீர்மூழ்கியை அமெரிக்க கடற்படை கப்பல்கள், மற்றும் நீர்மூழ்கிகள் தீவிரமாக தேடி வந்தன.
5 பேர் கொண்ட குழு சென்ற நீர்மூழ்கியில் 90 மணி நேரங்கள் மட்டுமே ஆக்சிஜன் இருக்கும் என்பதால் அதற்குள் அதை கண்டுபிடிக்க வேண்டும் என பலரும் வேண்டிக் கொண்டார்கள். ஆனால் அமெரிக்க கடற்படை தற்போது அளித்துள்ள தகவலின்படி 5 பேர் கொண்ட குழு சென்ற நீர்மூழ்கி கப்பல் ஆழ்கடலில் வெடித்து விபத்திற்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது. இதனால் 5 பேரும் கடலுக்கு அடியில் பலியாகி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பல ஆயிரம் பேரை காவு வாங்கிய கப்பலை காண சென்ற குழுவினரும் மோசமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.