Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அரசியலில் அமெரிக்காவின் தலையீடு உள்ளதா?

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (10:11 IST)
பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வாகியுளளார். இந்த நிலையில், பாகிஸ்தானின் எதிர்கட்சிகளுடன் இணைந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்கா அரசு செய்த சதியே, தனது ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து விலகிய  இம்ரான் கான் குற்றம் சாட்டியிருந்தார். 
 
நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமையன்று நாட்டு மக்களிடம் உரையாற்றியபோதும், இந்த கூற்றை தெரிவித்திருந்தார். தனது ஆட்சி கவிழ்ப்புக்கு காரணம் அமெரிக்காவின் சதித்திட்டமே என்று அவர் தெரிவித்தார். 
ஒரு மாதம்  முன்னர்,  ஓர் அமெரிக்க அதிகாரிக்கும்,  அமெரிக்காவின் பாகிஸ்தான் தூதரான அசாத் மஜீத் கானுக்கும் நடந்த நேரடி வாக்குவாதத்திற்கு பிறகே, இம்ரான் கான் இவ்வாறு தெரிவித்தார். இந்த வாக்குவாதம் குறித்து அசாத் மஜீத் பாகிஸ்தானிடம் தெரிவிக்கையில்,  இம்ரான் கான் மீது அமெரிக்கா அதிருப்தியில் உள்ளதாக கூறினார். மேலும், நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் அவரது ஆட்சி கலைக்கப்பட்டால்,  பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறவு மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.  அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் இதுகுறித்து ஊடகங்களிடம்  பேசியபோது, "பாகிஸ்தானின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக  கொள்கைகளின்படி அமைதியான தீர்வு காண நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாகவும்,  இம்ரான் கான் ஆட்சியை கலைக்க முயற்சி செய்வதாகவும்  கூறுவது தவறான செய்தி," என்று அவர் தெரிவித்தார். 
 
பாகிஸ்தானில்  எதிர்கட்சிகளும், ஊடகங்களும், ஆய்வாளர்களும் இம்ரான் கானின் இந்த குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது உண்மையே. இதற்கு ஆதாரமாக, சமூக ஊடகங்களில்  பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். அமெரிக்கா தனது நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதாக, பாகிஸ்தான் மக்களிடையே நிலவும் பொதுவாக கருத்து நிலவுகிறது. 
 
 அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானிய ஆய்வாளரான ஏ.என்.ரஹிம்  இதுகுறித்து பேசுகையில், "அமெரிக்கா  பிற நாட்டு விவகாரங்களில் தலையிடுவது என்பது ஆச்சரியப்படக் கூடிய விஷயம் அல்ல. அமெரிக்கா பாகிஸ்தான் நாட்டிலும், மற்ற நாடுகளிலும் பல சந்தர்ப்பங்களில் அப்படி செய்துள்ளது. அதற்கு  ஓர் உதாரணம், ஈராக்கில் நடந்த ஆட்சி மாற்றம்," என்று தெரிவித்தார். 
 
வரலாறு கூறுவது என்ன? 
இம்ரான் கான் அமெரிக்கா மீது கூறியுள்ள  குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும் சரி, பொய்யாக இருந்தாலும் சரி, அமெரிக்கா பலமுறை பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட்டுள்ளது. 
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாகிஸ்தான் மற்றும் மேற்கு ஆசியா விவகாரங்களின் ஆய்வாளர் ஏ.கே.பாஷா, "பொதுவாக  அமெரிக்கா ஆட்சி மாற்றம் செய்வதற்கு பெயர் பெற்றவர்கள்", என்று தெரிவிக்கிறார். 
 
அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்கா மற்ற நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.  1953 ஆம் ஆண்டு,  ஈரான் நாட்டில் முகமது முஸ்தாக்  ஆட்சியை கலைத்தது; பானாமாவில் நடந்த ஆட்சி மாற்றம்; துருக்கி முதல் ஈராக் வரை அமெரிக்கா பல நாடுகளில்  பல மாற்றங்களை செய்துள்ளது", என்று தெரிவித்தார். 
 
 "பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா பல முறை தலையிட்டிருப்பதற்கு உதாரணங்கள் உள்ளன", என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். 
 
"1958 ஆம் ஆண்டு, ஜெனரல் அயூப் கான் ஆட்சிக்கு வந்தார். அதன்பிறகு ஜெனரல் யாஹ்யா கான், ஜெனரல் ஸிஹாஹுல்  ஹக் மற்றும் ஜெனரல் பர்வேஸ்  முஷராப் ஆகியோருக்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தது.  சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக உள்ள அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைக்கு இவர்களை பயன்படுத்திக்கொண்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் நடந்த உலகளாவிய யுத்தத்திற்கு, அமெரிக்கா பாகிஸ்தானை பயன்படுத்திக்கொண்டது," என்று அவர் விளக்குகிறார். 
 
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி வருவதற்கான சாத்தியத்தை மறுக்கமுடியாது என்று பேராசிரியர் ஏ.கே.பாஷா தெரிவிக்கிறார். 
 
அவர் மேலும் கூறுகையில், "பாகிஸ்தானில்  அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதியான ஜெனரல் கமர் ஜாவீத் பஜ்வா அல்லது ராணுவத்தில் உள்ள தலைவர்  ஒருவரையோ ஆட்சியில் இருக்க அமெரிக்கா விரும்பலாம். இது அந்நாட்டு எகிப்தில்  அப்துல்  ஃபதேஹ் அல்-சிசி ஆட்சி அமைத்தது போல் செய்யலாம். சீனாவை  எதிர்கொள்ள பாகிஸ்தான் அரசை சார்ந்து இருக்க வேண்டிய நிலையை மாற்றவே, அங்கு ஆட்சி  மாற்றம் ஏற்பட அமெரிக்கா விரும்புகிறது", என்று தெரிவிக்கிறார். 
 
அவர் மேலும், "பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃப் ஆட்சியில் இருந்தபோது அமெரிக்கா இதை செய்ய முயற்சி செய்தது.  பெனாசிர் புட்டோ  ஆட்சி, இம்ரான் கான் ஆட்சி என அனைவரது ஆட்சியிலும் அமெரிக்காவுக்கு கடினமாக இருந்தது. அதனால்தான், அந்நாட்டில் தனது லட்சியங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்ற அங்கு ஒரு ராணுவ தலைவரை ஆட்சிக்கு கொண்டு வர  அமெரிக்கா விரும்புகிறது," என்றார். 
 
உலகளவில் தனது நம்பகத்தனமை குறைந்துவரும் நிலையில், பன்னாட்டு உறவுகளை மேம்படுத்த, அமெரிக்கா  தனது பழைய உத்தியை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்யலாம். அதை செயல்படுத்த மிகவும் பலவீனமான வழி, பாகிஸ்தான். அமெரிக்கா  இந்த வேலையை இந்த நாட்டில் இருந்து தொடங்கலாம். 
 
யுக்ரேன் போரில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகள் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பேராசிரியர் பாஷா தெரிவிக்கிறார். 
 
அவர் மேலும், "ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபன் அரசு மீண்டும் வந்திருக்கிறது. சீனாவுடனும், ரஷ்யாவுடனும் இணைவதற்கான மேற்கத்திய நாடுகளின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டது. இந்தியாவின் வெளியுறவு கொள்கையும் தற்போது  முன்பைவிட சுதந்திரமாக உள்ளது. இதுப்போன்ற சூழ்நிலையில், தெற்காசியாவில் தனது இருப்பை  நிலைநாட்டுவது அவசியமானது. பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கு  ஆதரவான ஆட்சியை உருவாக்குவதும்  முக்கியம்". என்று தெரிவித்தார்.
 
பாகிஸ்தானில் நடக்கும் சமீபத்திய  அரசியல் நெருக்கடிக்கு அமெரிக்காவின் பங்கை  அந்நாட்டு ராணுவம் மறுத்துள்ளது.  ஆனால், இம்ரான் கான் ஆட்சியில் உள்ள அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகள் குறித்து ஜெனரல்  உமர் ஜாவத் பஜ்வாவுக்கு திருப்திகரமாக  இல்லை  என்று பாகிஸ்தானில் உள்ள வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானில் யார் ஆட்சி செய்தாலும், அந்நாட்டின் ராணுவமே அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று பாகிஸ்தானிலும், உலகம் முழுவதும் உள்ள பரவலான கருத்து. 
 
பாகிஸ்தான் அரசியலில் அமெரிக்கா தலையிடுகிறது என்பது பல ஆண்டுகளாக உள்ள கருத்து. வாஷிங்டனைச் சேர்ந்த  பாகிஸ்தான்  ஆய்வாளர் ஷூஜா  நவாஸ்  இது குறித்து தனது 'தி பாட்ட்ல் ஃபார் பாகிஸ்தான்' (A Battle for Pakistan) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
"2000க்களில் மத்தியில்  பெனாசிர் புட்டோ  மீண்டும் அரசியலுக்கு வர விரும்பியபோது, சர்வதிகாரி பர்வேஸ் முஷாரஃப் உடன் சமரசத்தை எதிர்பார்த்த், அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் போச்சாரை தொடர்ந்து சந்தித்தார்". என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஒரு செய்தி கட்டுரையில், முன்னாள்  பாகிஸ்தான் தூதரான தெளகுர் ஹூசைன், "பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடைபெற மக்களின் ஆதரவு பெற அமெரிக்கா பல முயற்சிகளை மேற்கொண்டது.  இதனால், பாகிஸ்தானில் ஜனநாயகம் மற்றும் தேசியவாத அரசு அமைவதை தடுக்க முடியும்.", என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அவர் 1970க்களின் தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், பாகிஸ்தானை மிகவும் முக்கியமான நட்பு நாடு என்று  குறிப்பிட்டுள்ளார். 
 
வெளியுறவுக் கொள்கை இதழின் தெற்காசியாவின் வல்லுநரான மைக்கேல் குகல்மேனின் கூற்றுப்படி, அமெரிக்கா பாகிஸ்தான் அரசியல் தலைவர்களிடன் நல்லுறவை வளர்ந்துகொள்வதை விட பெரும்பாலும் பாகிஸ்தானின் ராணுவ தலைவர்களுடனான உறவை மேம்படுத்தவே விரும்புகிறது. குறிப்பாக அந்நாட்டு ராணுவம், வெளியுறவுக் கொள்கை முடிவுகளை எடுக்கிறது என்பது இதற்கு காரணம்.
 
பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் நெருக்கடி உடனடியாக முடிவுக்கு வராது என்று பேராசிரியர் பாஷா தெரிவிக்கிறார். ஏனென்றால் இப்போது ரஷ்யா, ஈரான், சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு புதிய அதிகார மையம் உருவாகியுள்ளது. அதை அமெரிக்கா உடனடியாக உடைக்க முடியாது. 
 
ஆனால் அணு ஆயுதம் சக்தி கொண்ட பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை, தெற்காசியா முழுவதும் மிகவும் முக்கியமானது என்பதையும், இந்தியாவைப் போலவே பாகிஸ்தானுக்கும் சுதந்திரமாக செயல்படும் வெளியுறவுக் கொள்கை தேவை என்பதையும் வல்லுநர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments