கத்தார் விமான நிலையத்தின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை யாருடையது என கண்டறிய பயணிகளை கத்தார் அரசு பரிசோதனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளில் ரகசிய காதல், முறையற்ற பாலியல் உறவுகள், கருத்தரித்தல் உள்ளிட்டவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதனால் முறையற்ற ரீதியில் குழந்தை பெறுவோர் அதை எங்காவது தூக்கி வீசிவிடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இந்நிலையில் கத்தார் விமான நிலையத்தில் ஆஸ்திரேலியா புறப்பட இருந்த விமானத்தின் பயணிகள் காத்திருப்பு பகுதி கழிவறையில் பிறந்த குழந்தை ஒன்று பிளாஸ்டிக் பையால் மூடிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக ஆஸ்திரேலிய விமானத்தை நிறுத்திய அதிகாரிகள் அதிலிருந்த பெண்களில் யாருடைய குழந்தை இது என கண்டறிய அவர்களை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸிற்கு அழைத்து சென்று சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி வைரலான நிலையில் சமூக ஆர்வலர்கள் பலர் கத்தார் அரசின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து கத்தார் அரசு தங்கள் செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளது.