ரஷ்ய அதிபர் புதின் அவரது நெருங்கிய வட்டாரங்களால் கொல்லப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து உள்ளது என்பதும் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் ரஷ்யா கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகள் உதவி செய்த போதிலும் உக்ரைன் நாட்டில் பெரும் சேதம் தான் ஏற்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா வீரர்களை உக்ரைன் வீரர்கள் விரட்ட முடியாத நிலைதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைன் வருகை தந்து உக்ரைன் நாட்டிற்கு தேவையான ஆயுதங்கள் வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா அதிபர் புதின் அவரது நெருங்கிய வட்டாரத்தினால் கொல்லப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய அதிபர் புதினின் நெருக்கமான வட்டாரங்களில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கொல்லப்படும் நிகழ்வு நிச்சயம் நடக்கும் என்றும் ஆனால் எப்போது என்பது எனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபரின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.