அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரியால் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடு தொகை கேட்டு அமெரிக்க நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகள் மீது விதித்த பரஸ்பர வரிவிதிப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரியால் பின்னலாடை நிறுவனங்கள், இறால் ஏற்றுமதி என பல தொழில்கள் பாதித்தன. இதற்கு எதிராக அமெரிக்க மாகாணங்களே ட்ரம்ப் மீது வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவசரக்கால நிலையை பயன்படுத்தி ட்ரம்ப் விதித்த வரிகள் அதிகாரத்தை மீறிய செயல் என கண்டித்ததோடு வரிகளை நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து ட்ரம்ப் செய்த மேல் முறையீடும் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் ட்ரம்ப் விதித்த இந்த புதிய வரி விதிப்பால் அமெரிக்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் சுமார் 210 பில்லியன் டாலர்களை இந்த பரஸ்பர வரியாக செலுத்தியுள்ளன. மேலும் பல நாடுகளில் இருந்து வரவேண்டிய ஆர்டர்களை கேன்சல் செய்தது உள்ளிட்டவற்றால் இழப்பையும் சந்தித்துள்ளதாக நீதிமன்றத்தில் முறையிட்டன. இந்நிலையில் இந்த வழக்கில் வரிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, வரியாக பெறப்பட்ட 210 பில்லியன் டாலர்கள் மற்றும் இழப்பீடையும் அமெரிக்க அரசு ஈடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப் “இது மிக முக்கியமான முடிவு, வெளிப்படையாகச் சொன்னால், அவர்கள் தவறான முடிவை எடுத்தால், அது நம் நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளார். ஆனால் வரிப்பணத்தை திரும்ப தருவது குறித்து அவர் பேசாமல் மௌனம் காத்து வருகிறார்.
Edit by Prasanth.K