Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோதி சென்னை உரை: முக்கியமான கூற்றுகள் எந்த அளவுக்கு உண்மை?

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (14:34 IST)
அ.தி.மு.க. தனது தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதியின் தமிழக வருகை கூட்டணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், பிரதமரின் உரையில் இருந்த தகவல்கள் எந்த அளவுக்கு நிதர்சனத்தை பிரதிபலித்தன?

பல்வேறு திட்டங்களை துவக்கிவைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி சென்னைக்கு வருவது உறுதிசெய்யப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியை கச்சிதமாக, தங்கள் பிரசாரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் நடத்தி முடிக்க அ.தி.மு.க. அரசு முடிவுசெய்து அதை நடத்தியும் காட்டியிருக்கிறது.

சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலத்திற்கு அருகில் உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளத்திற்கு வந்து இறங்கினார். அங்கிருந்து நேரு விளையாட்டரங்கம் செல்லும் வழியெங்கும் பொது மக்கள் நிறுத்தப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக பொது நிகழ்வுகளில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசினார். தனது உரையில் பிரதமரை வெகுவாகப் புகழ்ந்த துணை முதல்வர், மோதி போன்ற ஒப்பற்ற தலைவரைக் காண்பது அரிது என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி பேச எழுந்தபோது, பலத்த கரகோஷமும் அவரை வாழ்த்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன. பிரதமர் மோதி முதல்வரைப் பற்றிக் குறிப்பிட்டபோதெல்லாம் இதுபோன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது என்பது கவனிக்கத்தக்கதாக இருந்தது.

கடந்த சில தடவைகளில் இந்தியில் பேசிய பிரதமர் மோதி, இந்த முறை ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்தினார். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரை என்பதால், பிரதமரின் உரை உடனுக்குடன் சரியான முறையில் மொழிபெயர்க்கப்பட்டது.

இது ஒரு அரசு விழாவாக இருந்தாலும் இந்த விழாவில் பிரதமர் என்ன பேசப் போகிறார் என்பது குறித்து பலத்த ஆர்வம் நிலவியது. எதிர்பார்த்ததுபோலவே, தான் துவக்கிவைத்த திட்டங்கள் குறித்துப் பேசிய பிரதமர் மோதி, தமிழக மக்களின் கவனத்தைக் கவரும்வகையில் வேறு சில விஷயங்களையும் தொட்டுப் பேசினார்.

ஆனால், பிரதமரின் உரையில் இடம்பெற்றிருந்த சில தகவல்கள் முழுக்கவும் சரியானவை அல்ல என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். குறிப்பாக இலங்கையின் வடக்கு - கிழக்கில் தமிழர்களுக்காக 50,000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டதைப் பற்றி பிரதமர் சுட்டிக்காட்டிப் பேசினார். "இது முழுக்க முழுக்க திட்டமிட்டு, நிதி ஒதுக்கப்பட்டு நடத்தப்பட்டது முந்தைய ஐ.மு.கூ. ஆட்சியில். திட்டத்தை முடித்தது வேண்டுமானால் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் இருக்கலாம். ஆனால், ஐ.மு.கூ. ஆட்சியில்தான் இதற்கான பணிகள் அனைத்தும் நடந்தன" என்கிறார் அந்த காலகட்டத்தில் இலங்கையில் செய்தியாளராகப் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

அதேபோல, நுவரேலியா மாவட்டத்தில் உள்ள திகோயா ஆதார வைத்தியசாலையை திறந்து வைத்தது குறித்தும் பிரதமர் மோதி குறிப்பிட்டார். "இந்த திகோயா மருத்துவமனை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அதாவது 2013லேயே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், திறக்காமல் வைத்திருந்தனர். பிரதமர் அதை 2017ல் திறந்துவைத்தார். மற்றபடி பணிகள் அனைத்தும் நடந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில்தான்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

பிரதமர் தன்னுடைய உரையில், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும் பேசியது பலருக்கு ஆச்சரியமளித்தது. இலங்கைத் தமிழர்கள் சமத்துவத்துடன் அமைதியாக வாழ்வதை தமது அரசு உறுதிசெய்யுமென்றும் இலங்கை அரசுடன் இது தொடர்பாக தொடர்ந்து பேசுமென்றும் மோதி குறிப்பிட்டார்.

"இலங்கை அரசு இந்தியாவுடன் செய்துகொண்ட கன்டெய்னர் டெர்மினல் திட்டத்திலிருந்து தானாக விலகியிருக்கிறது. இதுதான் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசுவதன் விளைவா? இல்லை, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக 13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற பிரதமர் அழுத்தம் கொடுத்தாரா?" என்று கேள்வியெழுப்புகிறார் ராதாகிருஷணன். மேலும், இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகிய மாகாணங்களையே இல்லாமல் செய்ய இலங்கை அரசு முயற்சிப்பது குறித்து இந்தியா ஏதாவது சொல்லியிருக்கிறதா எனக் கேள்வியெழுப்புகிறார் ராதாகிருஷ்ணன்.

தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்துப் பேசிய பிரதமர், தனது ஆட்சிக் காலத்தில் சுமார் 1,600 மீனவர்கள் மீட்கப்பட்டிருப்பதாகக் கூறினார். தமிழக மீனவர்களின் நலனை தனது அரசு எப்போதும் பாதுகாக்கும் என்றும் தெரிவித்தார். ஆனால், கடந்த ஜனவரி 18ஆம் தேதிதான் தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நடைபெற்றது.

"2011ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்படி மீனவர்கள் கொல்லப்படுவது இப்போதுதான். இதுதொடர்பாக இந்திய அரசு போதுமான அளவு எதிர்வினையாற்றவில்லை" என்கிறார்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர்கள்.

கல்லணைக் கால்வாய் திட்டத்தை துவக்கிவைத்துப் பேசிய பிரமதர் நரேந்திர மோதி, அவ்வையாரை மேற்கோள்காட்டி, விவசாயம் குறித்துப் பேசினார். ஆனால், விவசாயிகளுக்காக மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்கள் குறித்தோ, அது தொடர்பான போராட்டங்கள் குறித்தே பிரதமர் ஏதும் சொல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

"இது ஒரு அரசு ரீதியான விழா. அதில் அரசின் திட்டங்களைப் பற்றி அவர் பேசியது சரிதான். ஆனால், விவசாயச் சட்டங்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாதது ஆச்சரியமளிக்கிறது. ஆனால், இந்தப் பேச்சில் தேவேந்திர குல வேளாளர்கள் குறித்த அறிவிப்பு மிக நல்ல விஷயம்" என்கிறார்.

தென் மாவட்டங்களில் வசிக்கும் 6 - 7 சமூகத்தினரை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், இதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்தக் கோரிக்கை சட்டமாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆனால், இதில் வேறு ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறார் ப்ரியன். "பிரதமர் சாதாரணமாக பேசியதற்கெல்லாம் பெரிய கைதட்டல் எழுந்த நிலையில், முக்கியமான, வரவேற்கத்தக்க இந்த அறிவிப்பிற்கு கூட்டத்தினரிடமிருந்து பெரிய அளவில் வரவேற்பு வரவில்லை. வேறு சில சமூகத்தினர் இந்த அறிவிப்பை எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறார்கள் என்பதை இது கோடிட்டு காட்டுவதாக இருக்கிறது" என்கிறார் அவர்.

தவிர, இந்த விழாவில் கூட்டணிக் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகியவற்றிலிருந்து மூத்த தலைவர்கள் யாரும் வராததும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. பிரதமரின் இந்த வருகை அ.தி.மு.கவைப் பொறுத்தவரை உற்சாகமளிப்பதாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இது தேர்தலுக்கு உதவுமா என்பது கேள்விக்குறிதான்.

"நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மோதி ஐந்து முறை தமிழகத்திற்கு வந்தார். 40,000 கோடி ரூபாய் அளவுக்கு திட்டங்களை அறிவித்தார். மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தார். ஏதும் நடக்கவில்லை" என்கிறார் ப்ரியன்.

மேலும், தற்போதைய சூழலில் பா.ஜ.கவைப் பொறுத்தவரை அ.தி.மு.கவும் சசிகலா தரப்பும் இணைவதையே விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆனால், பழனிசாமியை பொறுத்தவரை இதற்கான கதவுகளை எப்போதோ மூடிவிட்டார். இந்த நிலையில், முதல்வருடனான சந்திப்பில் பிரதமர் இது குறித்து வலியுறுத்தியிருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்பதை விவாதிப்பதற்கான வாய்ப்பும் இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments