Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோ பைடன் 1.0, ஒபாமா 3.0 ஆக இருக்குமா? எதிர் நிற்கும் சவால்கள் என்ன?

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (23:06 IST)
'அமெரிக்கா இஸ் பேக்' (பழையபடி திரும்பியது அமெரிக்கா) - அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி பெறும் கட்டம் வந்தபோது, ஜோ பைடன் அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் வெற்றி உரையின்போது இப்படித் தான் முழக்கமிட்டார்.
 
இந்த சந்தர்ப்பத்தில், தனது புதிய அணியை மக்களுக்கு அறிமுகப்படுத்திய அவர், "எனது அணிக்கு ஒப்பிடமுடியாத அனுபவமும் திறமையும் உள்ளது. பழைய சிந்தனை அல்லது பழைய பழக்கவழக்கங்களுடன் நாம் புதிய சவால்களை எதிர்கொள்ள முடியாது என்ற கருத்தையும் இந்த அணி பிரதிபலிக்கிறது." என்றும் குறிப்பிட்டார்.
 
ஜோ பைடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.
 
தற்போது அவர் தனது இடைக்கால அணியை அறிவித்துள்ளார். இதில் ஆன்டனி பிளிங்கன், ஜான் கெர்ரி, எவரில் ஹெய்ன்ஸ், ஜேக் சுலிவன், லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் போன்ற அனுபவம் மிக்கவர்களின் பெயர்களும் அடங்கும். இவர்கள் ஒபாமா ஆட்சியிலும் பங்கெடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பைடனின் புதிய அணி ஒபாமா ஆட்சியின் பிம்பமா?
 
பைடன் நிர்வாகத்தை ஒபாமா நிர்வாகத்துடன் ஒப்பீடு செய்வது குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்படுவதற்கு இதுதான் காரணம்.
 
 
ஜான் கெர்ரி - இவர் 2015 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபரின் பிரதிநிதியாக பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பின்னர் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக டிரம்ப் முடிவு செய்தார். காலநிலை மாற்றம் குறித்த அதிபரின் சிறப்புத் தூதராகச் செயலாற்ற இவரைத் தேர்ந்தெடுத்துள்ளார் பைடன்.
 
எவரில் ஹெய்ன்ஸ் - ஒபாமா அரசாங்கத்தில் பங்கெடுத்துள்ள இவர், தேசியப் புலனாய்வுத் துறையைக் கையாளும் முதல் பெண்மணியாகச் செயலாற்றவுள்ளார்.
 
ஆன்டனி பிளிங்கன் - பைடன் நிர்வாகத்தில் அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சராக இவர் இருப்பார். ஒபாமா நிர்வாகத்தில் வெளியுறவுத் துறை துணை அமைச்சராகவும் தேசியப்பாதுகாப்புத் துணை ஆலோசகராகவும் இவர் செயலாற்றியுள்ளார். அப்போது பைடன் துணை அதிபராக இருந்தார்.
 
ஜேக் சுல்லிவன் - இவர் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக சுல்லிவன் இருந்தார்.
 
லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் - இவர் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பராக் ஒபாமாவுடன் இணைந்து பணியாற்றியவர். இவர் 2013 முதல் 2017 வரை ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை துணை அமைச்சராக இருந்தார்.
 
ஆனால் ஒரு செய்தி ஊடகத்துக்கு பைடன் அளித்த பேட்டியில் "எனது நிர்வாகம் ஒபாமா நிர்வாகத்தின் மூன்றாவது பதவிக்காலம் ஆகாது" என்று தெளிவாக கூறியுள்ளார். ஒபாமா நிர்வாகத்தில் பங்கெடுத்த அமைச்சர்கள் தனது அணியிலும் இடம் பிடித்திருப்பதற்குக் காரணம், அவர்கள் அமெரிக்க மக்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிம்பமாகத் திகழ்கிறார்கள் என்பது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 
ஒபாமா நிர்வாகத்தின் மூன்றாவது ஆட்சிக் காலமாகத் தனது நிர்வாகம் இருக்காது என்பதற்கான காரணங்களையும் அவர் பட்டியலிட்டார். "நாங்கள், ஒபாமா-பைடன் நிர்வாகங்களின் ஒப்பீட்டில் ஒரு புதிய உலகத்தை எதிர்கொள்கிறோம்" என்று பைடன் கூறினார்.
 
 
டைம்ஸ் ஆப் இந்தியாவின் ராஜீய விவகாரங்கள் பிரிவு ஆசிரியர் இந்திராணி பக்சி, "பைடன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் குடியரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க காங்கிரஸ் தான். இரண்டாவது சவால் டிரம்ப் முறியடிக்கத் தவறிய கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது. மூன்றாவது சவால் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுவருதல். இவை மூன்றும் பைடன் முதலில் சமாளிக்க வேண்டிய உள்நாட்டுச் சிக்கல்கள். அவற்றைக் கையாளும் விதம் கொண்டு தான் பைடன் 1.0-வின் செயல்பாடு மதிப்பிடப்படும்." என்று கூறுகிறார்.
 
ஜோ பைடன் அமெரிக்க அதிபர் ஆவதால் இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
கமலா ஹாரிஸ் வெற்றிக்கு பின்னால்: அன்பு அம்மா முதல் காதல் கணவர் வரை
அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் ஆய்வுத் துறையின் இயக்குநரும் லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச உறவுகள் துறைப் பேராசிரியருமான ஹர்ஷ் பந்த் இந்திராணியின் கருத்துடன் உடன்படுகிறார்.
 
பிபிசியிடம் பேசிய அவர், "ஜோ பைடனுக்கு முன் இருக்கும் சவால், அமெரிக்காவின் மாறிவரும் அரசியல் கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு செயல்படப்போகிறார் என்பது தான். இந்த அரசியல் கண்ணோட்டங்கள் என்பவை உள்நாட்டு மற்றும் உலகளாவியவை ஆகும். அதற்கு முதலில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இரு அளவிலும் ஒரு விரிவான பாதை வகுத்து அதனைத் தன் அணியினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதைப் பின்பற்றி அணியின் செயல்பாடு இருக்கவேண்டும்" என்று கூறுகிறார்.
 
மேலும் அவர், "அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினருக்கு அதிக பலமில்லை. ஆனால், செனட் சபையில் இரு தரப்பினருக்கும் சரி பாதி பலம் உள்ளது. செனெட்டின் ஒப்புதல் தேவைப்படும் விஷயங்களில் குடியரசு கட்சி, பைடனுக்கு ஒரு சவாலாக இருக்கக்கூடும்." என்றும் கூறுகிறார்.
 
ஒபாமா 3.0 என்பதன் பொருள்
ஒபாமா 3.0 என்றால் என்ன? இதற்கு பதிலளித்த இந்திராணி, "ஒபாமா 3.0 என்றால் பைடன் இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவார். அவர் ரஷ்யாவுடன் ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார். காலநிலை மாற்றம் போன்ற விஷயங்களில் சீனாவுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும்" என்று கூறுகிறார்.
 
joe biden united states barack obama
பட மூலாதாரம்,BROOKS KRAFT LLC / CORBIS VIA GETTY IMAGES
இந்திராணி தொடர்ந்து கூறுகையில், "பைடன் 1.0, ஒபாமா 3.0 -வாக இருக்க வேண்டுமானால், ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அமெரிக்காவை இன்றைய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியது அவசியம். ஆனால் இன்று சீனா மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையை விரும்புகிறதா என்று கேட்டால், நிச்சயமாகக் கூற முடியாது. சீனாவின் அணுகுமுறையைப் பார்க்கும்போது, அமெரிக்காவுடன் சமரசம் செய்யத் தயாராக இல்லை என்று தெரிகிறது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போரில் தான் வெற்றி பெற்றதாக அது எண்ணுகிறது." என்கிறார்.
 
கடந்த நான்கு ஆண்டுகளில் சீனா நிறைய மாறிவிட்டது. இது உலகின் ஒரே சக்திவாய்ந்த பொருளாதாரமாகும், இது தொற்றுநோயைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது என்பது இந்திராணியின் கருத்தாகவுள்ளது
 
சீனாவுடனான தொடர்பு
ஜோ பைடனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதில் கால தாமதம் செய்த நாடுகளில் சீனாவும் ஒன்று. சீன அரசாங்க செய்தி நிறுவனத்தின்படி, ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனது வாழ்த்துச் செய்தியில், "சீன-அமெரிக்க உறவுகளின் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தின் பொதுவான எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்கிறது" என்று கூறியுள்ளார்.
 
வாழ்த்துச் செய்தி கூட பூடகமாகத் தெரிவிக்கப்படுவது, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளன என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments