Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலனியாதிக்கத்தில் இந்தியாவில் பிறப்புறுப்பு பரிசோதனைக்கு கட்டாயப்படுத்தப்பட்ட பெண்கள்

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (10:51 IST)
1868ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்திய நகரமான கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா) "பதிவுசெய்யப்பட்ட" பாலியல் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட பிறப்புறுப்பு பரிசோதனையை செய்துகொள்ளாத சுகிமோனி ரௌர் என்ற பெண்ணை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

பால்வினை நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட காலனித்துவ தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ், பாலியல் தொழிலாளர்கள் "காவல் நிலையங்களில் தங்களை பதிவுசெய்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுவதுடன் அவர்களது நடவடிக்கை கண்காணிக்கப்பட வேண்டும்" என்பது விதி.

தான் கைதுசெய்யப்பட்டதற்கு எதிராக போராடிய ரௌர், நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, "நான் ஒரு பாலியல் தொழிலாளராக இருந்ததில்லை என்பதால் மாதத்துக்கு இருமுறை பிறப்புறுப்பு பரிசோதனைக்கு உட்படவில்லை" என்று கூறினார். மேலும், காவல்துறையினர் தன்னை தவறாக பதிவு செய்துள்ளதாகவும், தான் ஒருபோதும் பாலியல் தொழிலாளியாக இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.

1869ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கல்கத்தா உயர்நீதிமன்றம் ரௌருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

அப்போது பேசிய நீதிபதி, ரௌர் "ஒரு பதிவுசெய்யப்பட்ட பாலியல் தொழிலாளி" அல்ல என்றும் இதுபோன்று பதிவு செய்வது என்பது தன்னார்வ தெரிவாக இருக்க வேண்டுமே தவிர, பதிவு செய்யுமாறு பெண்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.

காலனித்துவ ஆட்சிக்காலம் சார்ந்த ஆவண காப்பகங்களில் இருக்கும் குறிப்புகளை ஆராய்ந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பெண்கள், பாலினம் மற்றும் பாலியல் தொடர்பான பேராசிரியரான துர்பா மித்ரா, இந்த சட்டத்தின் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட பிறப்புறுப்பு பரிசோதனைக்கான விதிகளை பின்பற்றத் தவறியதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் காலனித்துவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக கூறுகிறார்.

பிரிட்டிஷ் அதிகாரிகளும் இந்திய அறிஞர்களும் "இந்தியாவில் நவீன சமுதாயத்தை கட்டுப்படுத்தவும் ஒழுங்கமைக்கவும் பெண்களின் பாலியல் செயல்பாடுகள் பற்றிய மாறுபட்ட கருத்துகளை உருவாக்கினர்" என்று பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ள பேராசிரியர் மித்ராவின் புதிய படைப்பான 'இந்தியன் செக்ஸ் லைஃபில்' குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பிபிசியிடம் பேசிய மித்ரா, பாலியல் தொழிலாளர்களாக கருதப்பட்ட பெண்களை பிறப்புறுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தி, வகைப்படுத்தி, பதிவுசெய்ய வைப்பது என்பது பாலியலை கட்டுப்படுவதற்கான ஒரு முறையாக கையாளப்பட்டது என்று அவர் கூறினார்.

1869ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாலியல் தொழிலாளர் சிலர், தங்களை பிறப்புறுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தி பதிவுசெய்ய கட்டாயப்படுத்துவதன் மூலம் "பெண்மைக்கு களங்கம்" ஏற்படுத்தப்படுவதாக கூறி கல்கத்தா அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

பெண்கள் "வெறுக்கத்தக்க இந்த செயல்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்". மேலும், காவல்துறையினரால் பிடிபட்டவர்கள் "தங்களை மருத்துவருக்கும் அவரது துணை அதிகாரிகளுக்கும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்... பெண் மரியாதை உணர்வு நம் இதயத்திலிருந்து முற்றிலுமாக அழிக்கப்படவில்லை" என்று அவர்கள் மேலும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால், அந்த மனுவை அதிகாரிகள் உடனடியாக நிராகரித்தனர்.

காலனித்துவ அரசின் புதிய சட்டத்திற்கு "ரகசிய பாலியல் தொழிலாளிகள்" அச்சுறுத்தலாக திகழ்வதாக அந்த மனுவை நிராகரித்த உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்கத்தாவில் இருந்த ஒரு முக்கிய மருத்துவமனையின் தலைவரான ராபர்ட் பெய்ன், பாலியல் தொழிலாளர்களை கட்டுப்படுத்துவது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்பதால், பெண்களின் அனுமதியின்றி அவர்களை இந்த சட்டத்தின்படி பதிவு செய்ய வேண்டும் என்றார்.

1870 மற்றும் 1888க்கு இடையில், கல்கத்தாவில் மட்டும் இந்த பதிவு சட்டத்தை மீறியதற்காக ஒவ்வொரு நாளும் சராசரியாக 12 பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்று பேராசிரியர் மித்ரா கூறுகிறார். மேலும், தங்கள் அரசின் கண்காணிப்பின் கீழ் இருப்பதை அறிந்த பல பெண்கள், கல்கத்தாவை விட்டு வெளியேறியதாக அதிகாரிகள் பதிவுகளில் குறிப்பிட்டனர்.

"கருக்கலைப்பு மற்றும் சிசுக்கொலைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களை" வங்காள காவல்துறையினர் சட்டப்பூர்வமாக பிறப்புறுப்பு பரிசோதனைக்கு உட்படுத்த முடியுமா என்பதை அப்போதைய மத்திய அரசு விவாதித்தது.

ஒரு மாஜிஸ்திரேட், "பெண்களை கட்டாய பிறப்புறுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தாவிட்டால், பாலியல் வல்லுறவு மற்றும் கருக்கலைப்பு சார்ந்த போலி வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்" என்று கருதினார். மேலும், பிறப்புறுப்பு பரிசோதனைக்கு பெண்களிடமிருந்து ஒப்புதல் பெறுவது "நீதி நிர்வாகத்தை" முடக்கிவிடும் என்று மற்றொருவர் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து, வங்காளத்தின் செயலாளருக்கு கடிதம் எழுதிய அப்போதைய கல்கத்தா நகர காவல்துறை ஆணையர் ஸ்டூவர்ட் ஹாக், இந்த சட்டத்திலுள்ள வரம்புகளின் காரணமாக பெண்கள் தொடர்ந்து தொற்றுநோய்களை பரப்புவதால் ஆண்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த சட்டத்திற்கு இந்தியாவிலும் பிரிட்டனிலும் எதிர்ப்பு அதிகரித்து வந்ததால், தொற்று நோய்கள் சட்டம் 1888இல் ரத்து செய்யப்பட்டது.

காலனித்துவ இந்தியாவில் பாலின மற்றும் பாலியல் சார்ந்த விடயங்கள் குறித்த புத்தகம் ஒன்றின் எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான ஜெசிகா ஹின்ச்சி, காலனித்துவ இந்தியாவில் பாலியல் தொழிலாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் மட்டும் பிறப்புறுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூறுகிறார்.

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய அவர், காலனித்துவ அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய 1871 சட்டத்தின்படி, மூன்றாம் பாலினத்தவர்களும் பிறப்புறுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் மேலும் சில குறிப்பிட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் பரம்பரை குற்றவாளிகளாக கருதப்பட்டதாகவும் கூறுகிறார்.

"மூன்றாம் பாலினத்தவர்களை படிப்படியாக இல்லாதொழிக்க செய்வது இந்த சட்டத்தின் நோக்கமாக இருந்தது. இதற்காக கட்டாயமாக காவல்துறையில் பதிவுசெய்வது, பெண் உடைகளை அணிந்து நிகழ்வுகளில் பங்கேற்பது, குடும்பத்திலிருந்து குழந்தைகளை பிரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன" என்று அவர் கூறினார்.

தொற்று நோய்கள் சட்டம் காலனித்துவ இந்திய வரலாற்றில் ஒரு வெட்கக்கேடான அத்தியாயமாக கருதப்படுகிறது.

பாலியல் தொழிலாளர்களை எவ்வாறு வரையறுப்பது என்பது குறித்து நீதிபதிகள், காவல்துறையினர் மற்றும் மருத்துவர்களுக்கு காலனித்துவ அரசு அதிகாரிகள் கேள்வித்தாள்களை விநியோகித்தனர்.

இதற்கு காலனித்துவ அதிகாரிகள், இந்திய பெண்கள் அனைவரும் பாலியல் தொழிலாளிகளாக இருக்கக் கூடும் என்று பதிலளித்ததாக பேராசிரியர் மித்ரா எழுதுகிறார். உயர் காவல்துறை அதிகாரியான ஏ.எச். கில்ஸ் என்பவரோ உயர் சாதியை சார்ந்த பெண்களை தவிர்த்து மற்ற பெண்கள் அனைவரையும் பாலியல் தொழிலாளிகளாக வகைப்படுத்தலாம் என்று வாதிட்டார்.

வங்காளத்தில் ஒரு நடுத்தர அளவிலான அதிகாரியாக பணியாற்றியவரும் பிறகு புகழ்பெற்ற நாவலாசிரியராகவும், இந்தியாவின் ’வந்தே மாதரம்’ பாடலை எழுதியவருமான பங்கிம் சந்திர சாட்டர்ஜி, "வேறுபட்ட பின்னணியை சேர்ந்த பெண்கள் ரகசியமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டது" பற்றி விவரித்துள்ளார்.

காலனித்துவ இந்தியாவில், இந்து உயர் சாதியை சேர்ந்தவர்களை தவிர்த்து அனைத்து பெண்களும் பாலியல் தொழிலாளர்களாக கருதப்பட்டனர்.

நடனமாடும் பெண்கள், விதவைகள், பலதாரமணம் கொண்ட இந்து மற்றும் முஸ்லிம் பெண்கள், பிச்சைக்காரர்கள், நாடோடிகள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்கள் மற்றும் வீட்டு ஊழியர்கள் ஆகியோர் அதில் அடங்குவர். வங்காளத்தின் 1881ஆம் ஆண்டு காலனித்துவ மக்கள் தொகை கணக்கெடுப்பில், 15 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் அனைவரும் பாலியல் தொழிலாளர்களாக கருதப்பட்டனர்.

கல்கத்தா நகரத்தின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அப்போது அங்கிருந்த 1,45,000 பெண்களில் 12,228 பேர் பாலியல் தொழிலாளர்களாக வகைப்படுத்தப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 1891இல் 20,000க்கும் மேற்பட்ட பெண்களாக உயர்ந்தது.

"இந்தச் சட்டத்தின் அறிமுகம் ஒரு பெரும் மாற்றத்திற்கு வழிவகுத்தது. அதாவது, பிரிட்டிஷார் காலனியாதிக்கம் செலுத்தி வந்த நாட்டில் பாலியல் நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்ளும் பிரதான வழியாக இது உருவெடுத்தது" என்று பேராசிரியர் மித்ரா கூறுகிறார். ஆனால், ஆண்களின் பாலியல் நடத்தைகள் அரசின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருந்தன. "பெண்களின் பாலியல் வாழ்க்கையில் காலனியாதிக்க அரசு செலுத்திய தலையீடு அவர்கள் பெண்களின் தினசரி வாழ்க்கையில் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது" என்று பேராசிரியர் மித்ரா மேலும் கூறுகிறார்.

இவற்றின் மூலத்தில் "மாறுபட்ட" பெண்மையை எளிதில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை என்ற கருத்து இருந்தது. இந்த செயல்பாட்டில், பேராசிரியர் மித்ரா கூறுகிறார், பெண்கள் "விவரிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், பொது பார்வையில் ஆராய்ந்தனர், வலுக்கட்டாயமாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக விசாரிக்கப்பட்டனர்". இந்த வரலாற்றின் பெரும்பகுதி, பெண்களுடன் இன்னும் என்ன நடக்கிறது என்பதை அவர் கூறுகிறார்.

இந்த பிரச்சனை எளிதில் தீர்க்க கூடியது அல்ல என்ற கருத்து நிலவி வந்ததே இந்த பிரச்சனையின் வேராக பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே "பெண்களை சோதனைக்கும் விசாரணைக்கும் உட்படுத்தியதாகவும், சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அவர்கள் மீது வலுக்கட்டாயமாக விதிமுறைகள் திணிக்கப்பட்டதாகவும்" பேராசிரியர் மித்ரா கூறுகிறார். மேலும், நிகழ்காலத்தில் பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் விடயங்களில் இந்த வரலாறின் பெரும்பகுதி இன்னமும் பிரபலிப்பதாக அவர் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

கன்னிமாரா நுாலகத்தை, 'கொன்னமர நுாலகம்' என மொழி பெயர்த்த கூகுள்: தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்..!

அடுத்த தேர்தலில் கனடா பிரதமர் தோல்வி அடைவார்: எலான் மஸ்க் கணிப்பு..!

2026 கூட்டணி ஆட்சியில் நாங்கள் இருப்போம்.. விஜய் உடன் கூட்டணியா? அன்புமணி பதில்..!

அடுத்த கட்டுரையில்