Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

திமுக VS அமமுக VS அதிமுக... கடும் போட்டி..! தேனி தொகுதி யாருக்கு..!!

Theni Candtiates

Senthil Velan

, சனி, 6 ஏப்ரல் 2024 (09:49 IST)
தமிழ்நாட்டில் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படும் தேனி தொகுதியில் டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த ரேஸில் அதிமுக வேட்பாளர் என்ன செய்து கொண்டிருக்கிறார். தேனி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம். 
 
தேனி மக்களவைத் தொகுதி மிக முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தை அதிகமுறை ஆண்ட அதிமுகவின் இரு முதல்வர்களும் தேனியில் உள்ள ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, அத்தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வமும் போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளார்.
 
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தேனி மக்களவைத் தொகுதி. பெரியகுளம் (தனி), போடி நாயக்கனூர், ஆண்டிபட்டி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது தேனி மக்களவைத் தொகுதி. 
 
சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய இரண்டு பேரவைத் தொகுதிகளும் மதுரை மாவட்டத்தில் உள்ளன. பிற நான்கு பேரவைத் தொகுதிகளும் தேனி மாவட்டத்தில் உள்ளன.
 
தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின்னர் நடைபெற்ற 3 தேர்தல்களில் 2 முறை அதிமுகவும், ஒரு முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. பெரியகுளம் தொகுதியாக இருந்த போது தற்போதைய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சேடப்பட்டி முத்தையா இருமுறை வென்றுள்ளார்.
 
எம்.ஜி.ஆர் காலம் தொட்டே தேனி மாவட்டத்தில் அதிமுக பலமாக இருந்துள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம், கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருந்தாலும், தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திடம் தோற்றது. அதிலும் சாதாரண வெற்றி அல்ல. கிட்டத்தட்ட 5 லட்சம் வாக்குகள் என 43% வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றி பெற்றிருந்தார். இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் கட்சியின் இவிகேஎஸ் இளங்கோவன் 4 லட்சத்து 28 ஆயிரத்து 120 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுகவைத் தொடங்கிய டிடிவி தினகரன், தங்கத் தமிழ்செல்வனை தேனி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக களமிறங்கினார். அவரும் 1 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் என்று கணிசமான வாக்குகளப் பெற்றார். அதிமுகவின் வாக்குகள் பெரும்பாலும் பிரிந்த போதும் அதிமுக வேட்பாளரே வெற்றி பெற்றது அதிமுகவின் பலத்தைக் காட்டியது.
 
webdunia
தற்போது அதிமுக மேலும் ஒரு பிரிவாக பிரிந்துள்ளது. ஓபிஎஸ்- க்கு தேனி தொகுதியில் இருக்கும் செல்வாக்கு யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவரும், அவரது மகன் ரவீந்திரநாத்தும் தற்போதைய தேர்தலில் டிடிவி தினகரனை ஆதரிப்பது பாஜக கூட்டணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரனும் அப்பகுதியின் முன்னாள் எம்பி என்பதால், அத்தொகுதி மக்களுக்கும் டிடிவி தினகரன் மிகப்பரிட்சயம். அதிமுக தேனி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக வி.டி. நாராயணசாமியை அறிவித்துள்ளது. திமுக தனது வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வனை நிறுத்தியுள்ளது.
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட போடிநாயக்கனூரில் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் நின்று தோல்வியுற்றிருந்தார். இந்த தேர்தலிலாவது வெற்றிபெற்று பதவி பெறும் ஆசையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயத்தில் தங்க தமிழ்ச்செல்வனிற்கு எதிரான கோஷ்டியும் திமுகவில் இருப்பதாக கூறப்படுகிறது. தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரான ராமகிருஷ்ணனுக்கும், வடக்கு மாவட்ட செயலாளரான தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
 
webdunia
இத்தகைய சூழலில் தேனி களம் அமமுகவிற்கு சாதகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. உசிலம்பட்டியின் தற்போதைய எம்.எல்.ஏ தற்போது ஓபிஎஸ் அணியில்தான் இருக்கிறார். போடிநாயக்கனூரில் ஓபிஎஸ் தான் வெற்றி பெற்றுள்ளார். ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சோழவந்தான் போன்ற பகுதிகளில்கூட அதிமுக ஆதரவாளர்கள் தான் அதிகம். அதிமுக சார்பில் நிற்கும் நாரயணசாமி மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே தினகரனுக்கு இம்மாதிரியான நிலைகள் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.
 
இதில், தினகரனுக்கு இருக்கும் சிக்கல் என்னவெனில், தேனி மக்களில் பெரும்பான்மையானோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு அதிமுக என்ற கட்சியின் பெயர், யார் பொதுச்செயலாளராக இருக்கிறார்கள் என்பதெல்லாம் பொருட்டில்லை. எனவே தினகரன் தனது சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது சவாலான பணி.
 
webdunia
திமுக காங்கிரஸ் கூட்டணியைப் பொருத்தவரை தங்கத் தமிழ்ச்செல்வன் தொகுதியில் நன்கு அறியப்பட்டவர். தொகுதியில் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை என்று கூட சொல்லலாம். அதேநேரத்தில், திமுக, காங்கிரஸ், விசிக கூட்டணி தங்க தமிழ்ச்செல்வனுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும். காங்கிரஸ் வாக்காளர்கள் அங்கு அதிகளவில் உள்ளார்கள்.  
 
webdunia
தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வெளியே தெரியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அதிமுக வாக்குகள் அப்படியே உள்ளதால் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டால் டிடிவி தினகரனுக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் சவாலாக இருப்பார் என ஒரு கருத்து நிலவுகிறது. இந்த ரேசில் வெற்றி பெறப்போவது யார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் திருநாவுக்கரசர்.. பாஜகவுக்கு இழுக்க முயற்சியா?