காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இந்தியாவில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் தலா 7500 ரூபாய் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக இன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நடைபெற்றது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ’மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. கொரோனாவை எந்த அளவுக்கு கட்டுப்படுத்துகிறோம் என்பதில்தான் ஊரடங்கின் வெற்றி உள்ளது’ எனக் கூறியுள்ளார்.
மேலும் காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பேசுகையில் ’இந்தியா முழுவதும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் வேளையில் பாஜக வெறுப்பு மற்றும் வகுப்புவாத அரசியலை செய்து வருகிறது. முதலில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் 12 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். நெருக்கடியை சமாளிக்க ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா 7, 500 ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.