தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்திரராஜன், சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிலையில் நேற்று அவர் கவர்னராக பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில் தெலங்கானா கவர்னராக பதவியேற்றதும் தமிழிசை செய்த முதல் பணி தெலுங்கானாவின் ஆறு புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகன் ராமா ராவ், சந்திரசேகர ராவின் மருமகன் ஹரீஷ் ராவ், மகேஸ்வரம் தொகுதி எம்.எல்.ஏ சபிதா இந்திரா ரெட்டி, கரீம் நகர் எம்.எல்.ஏ. கங்குலா கமலக்கர், கம்மம் எம்.எல்.ஏ. அஜய் குமார், மற்றும் சட்ட மேலவை உறுப்பினரான சத்யவதி ரத்தோடு ஆகிய 6 பேரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இவர்கள் 6 பேருக்கும் புதிய கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக கவர்னர் பதவியேற்க தெலுங்கானா செல்லுமுன் தமிழிசை கூறியதாவது: எல்லோரும் ஒரே நாடு எண்ணத்துடனே தெலுங்கானா செல்கிறே. நான் தெலுங்கானாவில் கவர்னராக இருந்தாலும் தமிழக மக்களுக்கு நான் சகோதரிதான் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.