குடும்ப அரசியல் குறித்து காங்கிரசிடம் மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடனான கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்வோம். தொகுதி ஒதுக்கீடு குறித்து திமுகவுடன் பேரம் பேசும் எண்ணமில்லை என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தேர்தல் சூழலை கணிக்க முடியாது. பீகார் நிலவரம் வேறு, தமிழக நிலவரம் வேறு. நிச்சயம் திமுகவை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்துவோம் என கூறினார்.
மேலும், பல மாநிலங்களில் முக்கிய தலைவர்களின் வாரிசுகளே அடுத்தடுத்து பதவிகளுக்கு வருகின்றனர். குடும்ப அரசியல் குறித்து காங்கிரசிடம் மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் குடும்ப அரசியல் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? என கேள்விகளை அடுக்கியுள்ளார்.
தேர்தல் சமயத்தில் கார்த்தி சிதம்பரம் திமுக குடும்ப அரசியல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது கூட்டணிக்கு அதிருப்தியை ஏற்படுத்துமோ என அஞ்சப்படுகிறது.