வங்க கடலில் உருவாகும் மோக்கா புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மோக்கா” என்ற புயலாக தீவிரமடைந்த நிலையில் வடக்கு – வடமேற்கு திசை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது. தற்போது அந்தமான் தீவின் போர்ட் ப்ளேயரில் இருந்து 530 கி.மீ மேற்கு – வடமேற்கு திசையில் இந்த புயல் நகர்ந்து கொண்டுள்ளது.
இந்த மோக்கா புயல் இன்று நண்பகல் நேரத்தில் வங்கதேசம் – மியான்மர் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக காற்றில் ஈரப்பதம் குறைவதால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
புயல் கரையை கடந்த பின் ஏற்படும் வளிமண்டல சுழற்சி மாற்றங்களால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.