Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தலைமைத் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை !

தலைமைத் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை !
, வியாழன், 9 மே 2019 (13:34 IST)
தமிழகத்தில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வரும் சத்யபிரதா சாஹூவை மாற்றவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரியாக உள்ள சத்யபிரதா சாஹு மீது பலப் புகார்கள் எழுந்துள்ளன. அதையடுத்து இப்போது வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் தேர்தல் அதிகாரியான சத்ய பிரதா சாஹுவை மாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் போக்கு சந்தேகமளிப்பதாக உள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது தமிழகத்துக்கு வேறு ஒரு அதிகாரியை பொறுப்பாளராக நியமிக்க வேண்டுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ரகசியமாக கோவையிலிருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது 13 மாவட்டங்களில் 46 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அவற்றில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பிருப்பதாகவும் அதற்காகத்தான் அந்த இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன எனவும் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

இது தேர்தல் ஆணையத்தின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. அரசியல் கட்சிகள் எதுவும் கோராமல், வாக்குப்பதிவு குறித்து புகார் அளிக்கப்படாமல் மறுவாக்குப்பதிவு எப்படி நடத்தப்படும் என்பது புதிராக உள்ளது. தர்மபுரி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் பத்து வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்து சுமார் இரண்டு வாரமான பின்பும் அதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. சிதம்பரம் மக்களவை தொகுதியில் கலவரம் நிகழ்த்தப்பட்ட பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று சுமார் நூறு வாக்காளர்களின் கோரிக்கைகளோடு மனு அளித்தும் அதை தலைமை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார்.

இந்த நிலையில் எந்தவொரு அரசியல் கட்சியும் புகாரோ கோரிக்கையோ முன்வைக்காமல் தன்னிச்சையாக 46 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருக்கிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறுவது வியப்பளிக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக முறைகேடுகள் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள முக்கியமான 21 அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கும் சூழலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் நடவடிக்கைகள் வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடக்குமா என்ற சந்தேகத்தை நமக்கு எழுப்பியுள்ளது. எனவே, தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டுமென்றால் தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரிக்கு பதிலாக வேறு ஒருவரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க தயார்; ஆனால்... செக் வைத்த கெஜ்ரிவால்