Publish Date: Thu, 09 Jul 2026 (13:05 IST)
Updated Date: Thu, 09 Jul 2026 (13:08 IST)
கடந்த பல வருடங்களாக திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் தற்போது அந்த கட்சிகள் அனைத்தும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததோடு திமுக கூட்டணியிலிருந்தும் வெளியேறிவிட்டன. அதோடு காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவின் அமைச்சரைவையிலும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் கூறும் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை அவர் சொல்லி வருகிறார். தவெகவின் அமைச்சரவையில் இடம் பெற்றாலும் திமுகவுடனான கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை.. நாங்கள் இன்னும் திமுகவுடன் நட்புடன்தான் இருக்கிறோம்.. நாங்கள் நினைத்தால் எந்த நேரமும் தவெக அமைச்சரவையிலிருந்து வெளியேறுவோம் என்றெல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் தவெக அமைச்சரவையில் இடம்.. ஆனால் திமுகவுடன் நட்பு என திருமாவளவன் சொல்கிறாரே என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து இது என்று வைகோ நக்கலடித்திருந்தார்.
இதுபற்றி கருத்து திருமாவளவன் எனக்கு நோபல் பரிசை பரிந்துரை செய்ததற்காக வைகோவுக்கு நன்றி.. நோபல் பரிசு கிடைத்தால் அவருக்கு நன்றி கூறுவேன் என பதில் சொல்லியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வைகோ விசிக தலைவர் திருமாவளவனை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.. நான் பேசிய வார்த்தையால் அவர் மனம் புண்பட்டிருந்தால் என் வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.. எனக்கு துளி அளவு கூட அவர் மீது கோபமும், வருத்தமோ கிடையாது எனக் கூறியிருக்கிறார்.