பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தினால், இந்திய ராணுவமும், விளையாட்டு வீரர நீரஜ் சோப்ரா போன்று நடந்து கொள்ளத் தயார் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 3-வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வரலானது. விளையாட்டில் பகைமை இல்லை என்பதை உணர்த்திவிட்டார் நீரஜ் என்று பாராட்டினார்கள்.
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தான் வீரர் அர்ஷத்
இந்நிலையில், ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ராணுவத் தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். அப்போது பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ராவத் பாராட்டு தெரிவித்தார். அதன்பின் அவர்களிடம் ராவத் பேசியதாவது:
கடந்த 2017-ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்தில் இருந்த சூழல் இப்போது இல்லை, சூழலில் அமைதி திரும்பி முன்னேறிவருகிறது. வரும்காலங்களில் அங்குள்ள மக்கள் வாழும் சூழல் நல்லவிதமாக இன்னும் மாறும்.
பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் எந்தவிதமான நட்புரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமானால், முதலில் பாகிஸ்தான் ஒரு அடி முன்னெடுத்து வைக்க வேண்டும். இந்தியா பலமுறை பல்வேறு நல்ல எண்ண நடவடிக்கைகளை எடுத்துவிட்டது. பாகிஸ்தான் முதல் அடி எடுத்துவைத்தால், தீவிரவாதத்தை நிறுத்தினால், இந்திய ராணுவமும் நீரஜ் சோப்ரா போன்று நட்புடன் பழகத் தயார்.
காஷ்மீரில் தீவிரவாதம் அதிகரித்துவிட்டது, உள்ளூர் இளைஞர்கள் அதிகமான அளவில் தீவிரவாத அமைப்பில் சேர்கிறார்கள், மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள், பாதுகாப்பு படையினரால் ஏராளமானோர் கொல்லப்படுகிறார்கள் என்று பல்வேறு விதமான கருத்துக்கள் ஊடகங்களில் பரப்பி விடப்படுகின்றன.
தீவிரவாத்தை ஒழிக்கவும், மக்களுக்கு அமைதியான வாழ்க்கை கிடைக்கவே ராணுவம் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. தொடர்ந்து ராணுவம் இதேபாதையில்தான் செல்லும், இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்லாமல், அவர்களின் பெற்றோர்களுக்கு கிடைக்க முயற்சிக்கிறோம். பல்வேறு இடங்களில் காணாமல்போன மகன்கள் கிடைக்காமல் பெற்ற தாய்கள், தங்கள் மகன் திரும்பிவர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். தீவிரவாதப் பிரச்சினையை காஷ்மீரில் தீர்ப்போம் என நான் நம்புகிறேன். தீவிரவாத பாதைக்கு செல்லும் இளைஞர்கள் மனமாற்றம்அடைந்து மீண்டும் குடும்பத்துக்கு வருவார்கள் இவ்வாறு ராவத் தெரிவித்தார்.