சிவகங்கையில் மஞ்சுவிரட்டில் ஆக்ரோஷமாக வந்த காளை ஒன்று எதிரே வந்த தாய் மற்றும் குழந்தையை கண்டதும் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பொங்கலையொட்டி தமிழத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்றன. சிவகங்கை சிராவயல் பகுதியில் மஞ்சு விரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதை காண சுற்றிலும் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர்.
மஞ்சு விரட்டுக்காக கொண்டு வரப்பட்ட காளை ஒன்று வாகனத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென கயிறை அறுத்துக்கொண்டு மக்கள் இருக்கும் திசையில் ஓடத்தொடங்கியது காளை. இதை அறியாமல் அந்த பக்கம் தன் குழந்தையோடு நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் காளை வேகமாக வருவதை கண்டு திகைத்து நின்றார்.
பெண்ணும், குழந்தையும் குறுக்கே நிற்பதை கண்ட காளை வேகத்தை குறைக்க முடியாமல் அருகே வந்ததும் சடாரென துள்ளி குதித்து அவர்களை தாண்டியது. பிறகு வேகத்தை குறைக்காமல் ஓடி விட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பெண்ணையும், குழந்தையையும் தாக்கிவிட கூடாது என காளை செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.